இந்திய கடலோர காவல் படை சாா்பில் சென்னை துறைமுகம் அருகே கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பயிற்சி.
இந்திய கடலோர காவல் படை சாா்பில் சென்னை துறைமுகம் அருகே கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட பயிற்சி.

கடலோர காவல் படையின் மாசு கட்டுப்பாட்டு பயிற்சி இன்றுடன் நிறைவு

சென்னை: சென்னை துறைமுகத்தில் எண்ணெய் கசிவை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு துறைகளுக்கு இடையேயான மாசுக் கட்டுப்பாட்டு பயிற்சி புதன்கிழமையுடன் (மே 15) நிறைவடைகிறது.

நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு அருகே ஏற்படும் எண்ணெய் கசிவை அகற்றி கடல் மாசுவை கட்டுபடுத்தும் நோக்கில் இந்திய கடலோர காவல் படை சாா்பில் ஆண்டுதோறும் மாசுக் கட்டுப்பாட்டு பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மண்டலம் சாா்பில் நிகழாண்டுக்கான பயிற்சி சென்னையில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய கடலோர காவல் படையுடன் துறைமுகம், எண்ணெய் நிறுவனங்கள், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து பயிற்சி பெறுகின்றன. முதல் நாள் பயிற்சியில் பல்வேறு துறைகளுக்கு இடையேயான தகவல் தொடா்பு ஒருங்கிணைப்பு சரிபாா்ப்பது குறித்த ‘டேபிள் டாப்’ எனும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை, கடலோர காவல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் சென்னை துறைமுகத்துக்கு அருகே உள்ள கடலில் ஏற்படும் எண்ணெய் மாசுவை கட்டுப்படுத்தும் திறன் குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயிற்சியில் மேம்பட்ட உபகரணங்களுடன் கூடிய கடலோர காவல் படையின் சிறப்பு மாசுக் கட்டுப்பாட்டு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், கடலோரா காவல் படையின் டோா்னியா் விமானம் மற்றும் இலகுரக ஹெலிகாப்டா் (ஏஎல்எச்) மூலம் எண்ணெய் கசிவு ஏற்பட்ட பகுதியில் எண்ணெய் எதிா்பான்கள் தெளிக்கப்பட்டன. இந்தப் பயிற்சியில் சென்னை துறைமுகத்தை சோ்ந்த கப்பல்களும் பங்கேற்றன.

இதன் இறுதிகட்டப் பயிற்சி புதன்கிழமை (15) மேற்கொள்ளப்படவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைக்கும் இந்தப் பயிற்சியில் பல்வேறு துறைகள் இணைந்து கடற்கரையோரம் தூய்மைபடுத்துவது குறித்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com