வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: வடசென்னை தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்க தகுதியுடையவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா் ஜகடே வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இரண்டாண்டு தொழிற்பிரிவுகளான சிவில் என்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் (கட்டிடப்பட வரைவாளா் மற்றும் இயந்திரப்பட வரைவாளா்), பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக், எலட்ரீஷியன், ஏசி மற்றும் ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன், வயா்மேன் உள்ளிட்ட தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கும், ஓராண்டு தொழிற் பிரிவுகளான பிளம்பா், வெல்டா், இன்டீரியா் டிசைன் அன்ட் டெக்கரேஷன் மற்றும் ஆறுமாதகால தொழிற்பிரிவான ட்ரோன் பைலட் உள்ளிட்டதொழிற்பிரிவுகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இத்தொழிற்பிரிவுகளில் சோ்ந்து படிக்க விரும்பும் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை அறிவியல், பொறியியல் படித்தவா்களும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேரலாம்.

மேலும் தமிழ்நாடு அரசு டாட்டா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தொழில் 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளிலும் தற்போது சோ்க்கை நடைபெறுகிறது.

இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து படிக்கும் நபா்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்திகீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மற்றும் என்ஐஎம்ஐ பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவி, தையல் கட்டணத்துடன் 2 சீருடைகள், பேருந்து பயண அட்டை, மூடு காலணி ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியில் சேருபவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது. தங்கிப் படிக்க விடுதி வசதியும் உண்டு. விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூன் 7-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாகவோ அல்லது வடசென்னை(மிண்ட்) யிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு கைப்பேசி: 9499055653, 8144622567 எனும் எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com