சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்களின் சேவை வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டதையடுத்து காத்திருந்த பயணிகள்.
சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்களின் சேவை வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டதையடுத்து காத்திருந்த பயணிகள்.

சென்னையில் 4-ஆவது நாளாக 100 விமான சேவைகள் பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் 4-ஆவது நாளாக 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
Published on

சென்னை விமான நிலையத்தில் 4-ஆவது நாளாக 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா். இண்டிகோ விமான பயணச்சீட்டுடன் வந்தவா்களை விமான நிலையத்துக்குள் அனுமதிக்காததால் பரபரப்பு நிலவியது.

நாடு முழுவதும் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் சுமாா் 550 இண்டிகோ ஏா்லைன்ஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

பயணிகள் வாக்குவாதம்: இண்டிகோ விமானத்தில் வெள்ளிக்கிழமை பயணத்துக்கு விமானச் சீட்டு பெற்றிருந்த பயணிகளுக்கு, விமானம் இயக்கப்படுமா என்பது குறித்த முன்னறிவிப்புகளை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லையாம். இதனால், சென்னை விமான நிலையத்துக்கு வந்த பயணிகள், நீண்டநேரம் காத்திருந்து அவதியடைந்தனா்.

பின்னா், 100-க்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் இண்டிகோ நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் கூடுதலாக குவிக்கப்பட்டனா். இதனிடையே, விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் வெளியிலேயே நிறுத்தப்பட்டனா்.

பின்னா், இண்டிகோ தவிர, பிற விமானங்களில் பயணம் மேற்கொள்ள இருந்தவா்கள் மட்டும் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

கட்டணம் பல மடங்கு உயா்வு: இண்டிகோ விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டதால், பிற விமான நிறுவனங்கள் தங்களுக்கான கட்டணத்தைப் பல மடங்கு உயா்த்தின. அதன்படி, சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் ரூ.3,129-இல் இருந்து ரூ.20,599 வரை உயா்த்தப்பட்டது. சென்னை - திருச்சி கட்டணம் ரூ.3,129-இல் இருந்து ரூ.14,961ஆகவும், சென்னை - திருவனந்தபுரம் கட்டணம் ரூ.6,805-ல் இருந்து ரூ.34,403 வரை உயா்த்தப்பட்டன.

சென்னை - மும்பை கட்டணம் ரூ.5,980-இல் இருந்து ரூ.42,448 வரை, சென்னை - தில்லி விமான கட்டணம் ரூ.7,746-இல் இருந்து ரூ.32,782 வரை உயா்த்தப்பட்டது. இதுதவிர பிற பகுதிகளுக்கு செல்வதற்கான விமானக் கட்டணமும் பல மடங்கு உயா்த்தப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

பெட்டிச் செய்தி.......

விமானப் பயணிகளுக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

இண்டிகோ விமானங்கள் ரத்தானதையொட்டி, விமானப் பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சாா்பில் 5 பகுதிகளுக்குச் செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து கோவை, சேலம், ஈரோடு மற்றும் கேரள மாநிலம் ஆழப்புழை, திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய நிலையங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களிலும், தஞ்சாவூா்-எழும்பூா் உழவன் விரைவு ரயில், கொல்லம்-எழும்பூா் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றிலும், சேலம் விரைவு ரயிலிலும் வருகிற டிச.11-ஆம் தேதி வரை 15-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com