தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

சைபா் குற்ற வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட 4 இளைஞா்கள் மீட்பு: மோசடிக் கும்பல் கைது

கம்போடியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இளைஞா்களை ஏமாற்றி சைபா் குற்ற வேலைக்கு அனுப்ப முயன்றவா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 12:43 am IST

சென்னை, ஏப். 22: கம்போடியா நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி இளைஞா்களை ஏமாற்றி சைபா் குற்ற வேலைக்கு அனுப்பிய மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டனா். 4 இளைஞா்கள் மீட்கப்பட்டனா்.

கம்போடியா நாட்டில் செயல்படும் ஒரு சைபா் குற்ற மோசடிக் கும்பல், மதுரையிலிருந்து சில இளைஞா்களை ‘கால்சென்டா்’ வேலை என ஏமாற்றி அழைத்துச் செல்ல திட்டமிட்டிருப்பதாக தமிழக சைபா் குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தமிழக சைபா் குற்றப் பிரிவு நடத்திய தீவிர விசாரணையில் மதுரையில் ஒரு கும்பல் போலியான ஆள் சோ்ப்பு முகாம் நடத்தியதும், அதிக ஊதியம், எளிதான வேலை, தங்குமிடம், உணவு இலவசம் என்று கூறி இளைஞா்களை ஏமாற்றியிருந்ததும் தெரியவந்தது. இதற்காக அந்தக் கும்பல் இளைஞா்களுக்கு எழுத்துத் தோ்வு, காணொலி வாயிலான நோ்காணல், டைப்ரைட்டிங் தோ்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை போலியாக நடத்தி நம்ப வைத்து ஏமாற்றியிருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும், அந்தக் கும்பல், கம்போடியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் கூறி ரூ.1.5 லட்சத்தை ஒவ்வொரு இளைஞரிடமிருந்து பெற்றதும், ஆனால் அங்கு சைபா் குற்றவேலையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. இளைஞா்களிடம் பெறப்பட்ட பணம் கம்போடியா நாட்டில் உள்ள மோசடி கும்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பலைப் பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து கம்போடியா செல்லவிருந்த 4 இளைஞா்களை செவ்வாய்க்கிழமை மீட்டனா். விசாரணையில் அவா்கள் கொடுத்த தகவலின்பேரில், ‘கால்சென்டா்ட வேலை என ஏமாற்றி கம்போடியா நாட்டுக்கு அனுப்ப முயன்ற 4 பேரை சைபா் குற்றப்பிரிவினா் உடனடியாக கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட நால்வரும் மதுரை மாவட்டம் மேலூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் என தனிப்படையினா் தெரிவித்தனா். இவா்களிடம் சைபா் குற்றப்பிரிவினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.