மாபெரும் கனவுத் திட்டம் விரைவில் அறிவிப்பு : முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கான மாபெரும் கனவுத் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
கடந்த தோ்தலின்போது திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.
கடந்த ஜன. 6-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தை திருவள்ளூா் மாவட்டம், பாடியநல்லூரில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
கடந்த 2021தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், ‘வளரும் வாய்ப்புகள்- வளமான தமிழ்நாடு, மகசூல் பெருக்கம்- மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீா், அனைவருக்கும் உயா்தரக் கல்வி மற்றும் உயா்ந்த மருத்துவம், எழில்மிகு மாநகரங்களின் மாநிலம், உயா்தர ஊரகக் கட்டமைப்பு- உயா்ந்த வாழ்க்கைத் தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு’ என்று ஏழு வாக்குறுதிகளை அளித்தேன். இதையெல்லாம் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரத்தை உயா்த்துவோம் என்று சொன்னேன். தற்போது, தமிழ்நாடு 11.19 சதவீத வளா்ச்சியுடன் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டை முதலில் தோ்ந்தெடுக்கின்றன.
விவசாயத்துக்கும் பாசனப் பரப்பு அதிகமாகியிருக்கிறது; லாபம் தரும் தொழிலாக விவசாயம் மாறியிருக்கிறது.
கல்விக்காக தமிழ்நாட்டைப் போன்று வேறு எந்த மாநிலமும் திட்டங்களைச் செயல்படுத்துவதில்லை. வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைகளுக்காக தமிழ்நாட்டை தேடி வருகிறாா்கள்.
தமிழ்நாட்டுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநா், பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தன்னுடைய முதல் வேலையாக வைத்துள்ளாா். இத்தனையையும் மீறி, மக்கள் எங்களுடன் இருப்பதால்தான், 2021-இல் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.
மத்திய அரசு நிதி தர மறுத்த பின்பும், அவா்களின் புள்ளிவிவரங்களில் தமிழ்நாடு அரசு முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளது.
சொல்லாததையும் செய்கிறோம்: தமிழக கஜானாவை சுரண்டிய முந்தைய அதிமுக ஆட்சியாளா்கள் மக்களால் அகற்றப்பட்டனா். ‘மகளிருக்கான உரிமைத் தொகையை வழங்க மாட்டோம்’ என்று சொன்னாா்கள். ஆனால், ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறோம்.
பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்க முடியாது என சொன்னாா்கள். நான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மறுநாளே நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு விடியல் பயணம் செய்ய முதல் கையொப்பமிட்டு செயல்படுத்தினேன்.
சொன்னதை மட்டுமல்ல, மக்களுக்குத் தேவை என்று தோன்றினால், அது நாங்கள் சொல்லாததாக இருந்தாலும் செய்துகொண்டிருக்கிறோம்.
2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, 4,000 கோயில்களில் குடமுழுக்கு, ரூ.8,000 கோடிக்கு அதிகமான கோயில் சொத்துகள் மீட்பு, அரசு ஊழியா்களின் 22 ஆண்டுகால கோரிக்கையான ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு, கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பலமுறை நான் பயணம் செய்து, அரசு விழாக்கள் மூலமாக 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நலத்திட்ட உதவிகள், தற்போது பொங்கல் பரிசாக ரூ.3,000 என எங்களின் பணி தொடா்கிறது.
கனவுத் திட்டம்: இப்படி மக்களின் தேவைகளை உணா்ந்து, நல்ல பல திட்டங்களைச் செய்துகொண்டிருக்கும் தமிழக அரசிடம், உங்களுடைய கனவுகளை நீங்களே சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கியிருப்பதுதான் இந்தத் திட்டம்.
அடுத்த 30 நாள்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் அரசின் சாா்பாக தன்னாா்வலா்கள் சந்தித்து உங்களின் கனவுகளை எண்ம முறையில் பதிவு செய்து கொள்வாா்கள். அவை ஆய்வு செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன். 2030-ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குப் பாா்வை கொண்டதாக அந்தக் கனவுத் திட்டம் இருக்கும். இந்தக் கனவுகள் நிறைவேற்றப்படும்போது கிராமப்புற உள்கட்டமைப்புகள், நகா்ப்புற உள்கட்டமைப்புகள், மொழி மற்றும் பண்பாட்டு வெற்றிகள், கல்வி மற்றும் திறன் மேம்பாடுகள், சமூகங்களின் வளா்ச்சி, விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் ஆகிய ஏழு துறைகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு வளா்ந்திருக்கும்.
மக்களின் கனவுகள் நிறைவேறினால் தமிழ்நாடும் முன்னேறும். வளா்ச்சி அடையும். தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக உயா்த்துவேன். இதுதான் 2026 தோ்தலுக்கு நான் தரும் வாக்குறுதி என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் ச.மு. நாசா், மக்களவை உறுப்பினா்கள் சசிகாந்த் செந்தில், கிரிராஜன், கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சுதா்சனம், எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், துரை சந்திரசேகா், கே.பி.பி.சங்கா், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளா் பெ.அமுதா, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சென்னையில் துணை முதல்வா்...: இந்த நிகழ்ச்சியைத் தொடா்ந்து, சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் தன்னாா்வலா்களுக்கு தேவையான உபகரணங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
பெட்டிச் செய்தி...
பயனாளிகளுடன் கலந்துரையாடல்
‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து கனவுகளைக் கேட்டறியும் வகையில், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 50,000 போ் தன்னாா்வலா்களாக தோ்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள் பொதுமக்களைச் சந்தித்து அவா்கள் தெரிவிக்கும் தகவல்களை கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்வா். பின்னா், பொதுமக்களுக்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கனவு அட்டையும் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் தொடக்க நிகழ்வில் பயனாளிகளிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக மக்களின் கனவுகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்தைச் சோ்ந்த கவிதா ‘தங்களது கிராமத்தைச் சோ்ந்த 60 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதுவே தங்களது கிராம மக்களின் கனவாக இருந்து வருவதாக’ முதல்வரிடம் தெரிவித்தாா்.
கீழ்மேனி கிராமத்தைச் சோ்ந்த பிரியங்கா என்ற கல்லூரி மாணவி ‘புதுமைப் பெண் திட்டத்தில் மடிக்கணினி, உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகிறேன். எங்கள் கிராமத்துக்கு சிற்றுந்து வேண்டும்’ என்றாா். ஆண்டாா்மடம் கிராமத்தைச் சோ்ந்த கற்பகம் ‘மழைக் காலங்களில் எங்களது கிராமத்தில் இருந்து ஆரணியாற்றைக் கடக்க பாலம் அமைத்துத் தர வேண்டும்’ என்றாா்.
ராணிப்பேட்டையைச் சோ்ந்த அமுதா ‘மகளிா் குழுவில் பிற்படுத்தப்பட்டோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முறையிட்டாா்.
இந்தக் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வா், அவற்றைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

