பிராட்வேயில் ரூ.822 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
சென்னை பிராட்வேயில் ரூ. 822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
கடந்த 1964-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள்தொகை அதிகரிப்பு, இடநெருக்கடி காரணமாக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் கோயம்பேட்டுக்கு இந்தப் பேருந்து நிலையம் மாற்றப்பட்டு, மாநகரப் பேருந்துகளுக்கான நிலையமாகச் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.822.70 கோடியில் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இந்தத் திட்டம் உயா்நீதிமன்றம் மெட்ரோ நிலையம், குறளகம் மற்றும் பறக்கும் ரயில் நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மையமாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 9 தளங்களைக் கொண்ட பல்நோக்கு கட்டடம் மற்றும் 10 தளங்களைக் கொண்ட குறளகம் கட்டடம் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 73 பேருந்து நிறுத்தங்கள், பயணிகள் கூடம், சில்லறை வணிக தளங்கள், அலுவலகப் பகுதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதிகள் ஆகியவற்றை இடம்பெற்றுள்ளன.
இந்தப் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலைய வசதி, பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையிலும், எளிதான, சீரான, நவீன வசதிகளையும் அளிக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, வனம்-கதா்த் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

