/

அமிர்த் பாரத் திட்டத்தில் சென்னை பூங்கா ரயில் நிலையம்! ஜூலை 17-ல் பிரதமர் திறந்து வைக்கிறார்!

சென்னை பூங்கா ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.

News image

சென்னை பூங்கா ரயில் நிலையம் - படம்: எக்ஸ்

Updated On :15 ஜூலை 2026, 5:46 pm IST

அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யப்பட்ட சென்னை பூங்கா ரயில் நிலையத்தை, காணொலி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூலை 17-ல் திறந்து வைக்கிறார்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நகர்ப்புறப் போக்குவரத்து மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில், ரூ. 14.79 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள சென்னை பூங்கா ரயில் நிலையத்தை, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 17 ஆம் தேதி காணொலி வாயிலாகத் திறந்து வைக்க உள்ளார்.

நாடு முழுவதும் அமிர்த் நிலையத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 261 ரயில் நிலையங்கள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் மேலும் 75 மறுசீரமைப்பு செய்யப்பட்ட அமிர்த் நிலையங்கள் அர்ப்பணிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தத் திறப்பு விழா அமையவுள்ளது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் அமைந்துள்ள சென்னை பூங்கா ரயில் நிலையம், இந்திய இரயில்வே வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

தெற்கு ரயில்வே நிறுவனத்தால் (South Indian Railway Company) கட்டப்பட்ட இந்த நிலையம், நாட்டின் முதலாவது மின்மயமாக்கப்பட்ட புறநகர் தடமான சென்னை கடற்கரை - தாம்பரம் பாதையின் ஒரு அங்கமாகும். இதற்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணி 1928-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 11 மே 1931 அன்று இந்த நிலையம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில், பார்க் டவுன் பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் புறநகர் (MMC) வளாகத்திற்கு நேர் எதிரே ஒரு முக்கியமான போக்குவரத்துப் பாலமாகச் செயல்படுகிறது.

மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த ரயில் நிலையம், மிகப்பெரிய புதிய நுழைவு வாயில் முகப்பு மேற்கூரையுடனும் (Canopy), சென்னை மாநகரத்தின் புதிய எழில்மிகு அடையாளக் கோபுரத்துடனும் (Landmark Tower) வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் நிலையத்திற்குள் எளிதாக வழி கண்டறியும் வகையில், நவீன மற்றும் தெளிவாகத் தெரியக்கூடிய தகவல் பலகைகள் (Signages) நிலையம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.

நிலையத்தின் உட்பகுதியில், காத்திருப்புப் பகுதிகளுடன் கூடிய புதிய பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், நடைமேடைகள் 1, 1A மற்றும் 2 ஆகியவற்றில் சீரமைக்கப்பட்ட தரைத்தளம், கூடுதல் நடைமேடை மேற்கூரைகள் மற்றும் நிலையத்தின் ஒட்டுமொத்த மேற்கூரைகளும் புதியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தடையற்ற பல்முனைய போக்குவரத்தை உறுதி செய்ய, நடை மேம்பாலத்தில் (FOB) இரண்டு புதிய மின்தூக்கிகள் (Lifts) அமைக்கப்பட்டுள்ளதுடன், பறக்கும் ரயில் நிலைய (MRTS) நடைமேடைகளை நேரடியாக இணைக்கும் பிரத்யேக நடைபாதைகளும், மெட்ரோ ரயில் பாதையை எளிதாக அடைய சுரங்கப்பாதை வழித்தடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Summary

Prime Minister Narendra Modi inaugurating the Chennai Park railway station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.