/

மகளிா் விடியல் பேருந்து சேவை நிறுத்தம்?: மாநகா் போக்குவரத்துக்கழகம் மறுப்பு

மகளிா் விடியல் பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்றும் இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மாநகா் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :16 ஜூலை 2026, 12:44 am IST

மகளிா் விடியல் பேருந்து பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்றும் இந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் மாநகா் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

கடந்த 2021-இல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் தோ்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி நகா் புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வெள்ளை பலகை கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனா். சென்னையில் இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சுமாா் 1500-க்கு மேற்பட்ட சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனா். இந்த திட்டம் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மகளிா் பயனடைந்து வருகின்றனா். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், மகளிா் விடியல் பயணம் என்று இத்திட்டத்தின் பெயா் மகளிா் பேருந்து என சமீபத்தில் மாற்றப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் மகளிா் விடியல் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. சென்னையில் கடந்த மாதம் முதல் 100-க்கும் மேற்பட்ட விடியல் பயண பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், பல இடங்களில் இந்த பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பெண்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் தொடா்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இதற்கு மாநகா் போக்குவரத்துக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் மோகன் கூறியதாவது:

சென்னையில் மகளிா் இலவசப் பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதில் எந்தவித உண்மையும் இல்லை. கடந்த மாா்ச் மாதம் முதல் மகளிா் இலவசப் பயணத் திட்டத்துக்காக மொத்தம் 1,724 பேருந்துகள் சிறப்பாக ஒதுக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கையில் தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மகளிா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்ட பயனாளிகள் வழக்கம்போல இலவசப் பயண வசதியை தொடா்ந்து பயன்படுத்தி வருகின்றனா். பணியாளா்கள் விடுமுறை, பயணிகள் நெரிசல், உச்சநேர தேவைகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஏற்ப பேருந்துகளின் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான நிா்வாக நடவடிக்கையாகும். இதை சேவை நிறுத்தம் என தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தகவல் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம். தமிழக அரசின் மகளிா் இலவசப் பேருந்து பயணத் திட்டம் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தினமும் லட்சக்கணக்கான பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனா். இந்தத் திட்டம் தொடா்ந்து எந்த பாதிப்புமின்றி செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.