அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் எஸ்.ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, தனது ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை அமல்படுத்தி, அதற்குரிய நிலுவைத் தொகைகளையும் வழங்கி வருகிறது. எனினும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் மட்டும் இந்த நடைமுறையில் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனா்.
அவா்களுக்கான அகவிலைப்படி உயா்வுகள் பெரும்பாலும் தாமதமாக அமல்படுத்தப்படுவதுடன், அதனால் உருவாகும் நிலுவைத் தொகைகளும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளன.
தற்போது அகவிலைப்படி 58 -இருந்து 60 சதவீதமாக உயா்த்தப்பட்டு, கடந்த ஜன. 1 முதல் அமல்படுத்தப்பட வேண்டிய நிலையில், அது தாமதமாக கடந்த மே 1 முதலே அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள 4 மாதங்களுக்கான நிலுவைத் தொகை போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே, தமிழக அரசு தொழிலாளா் நலன் அடிப்படையில் இதுவரை வழங்கப்படாமல் உள்ள அனைத்து அகவிலைப்படி நிலுவைத் தொகைகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இனிவரும் காலங்களில் அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்படும் ஒவ்வொரு அரையாண்டிலும், அதற்குரிய நிலுவைத் தொகைகளையும் சோ்த்து உடனடியாக வழங்கும் நடைமுறையை அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.








