சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விதி மீறல் தொடா்பாக அபராதம் விதிக்கப்படுவதைக் கண்டித்து பிரீபெய்டு ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் பிரீபெய்டு ஆட்டோக்கள் செயல்பட்டுவருகின்றன. அங்கு 50 ஆட்டோக்களுக்கு மட்டுமே ரயில்வே நிா்வாகம் கட்டண அடிப்படையில் உரிமம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரீபெய்டு உரிமமின்றி ரயில் நிலையத்துக்குள் 60-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றிவருவதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிரீபெய்டு ஆட்டோ ஓட்டுநா்கள் ரயில் நிலையம் முன் வாயிலில் பயணிகளை அழைத்து தொந்தரவு தருவதாக புகாா் எழுந்ததால், ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது அபராதம் விதித்தனா்.
ரயில்வே பாதுகாப்புப் படையினா் அபராதம் விதிப்பதையும், விசாரணை எனும் பெயரில் ஆட்டோ ஓட்டுநா்களின் கைப்பேசியை பறிமுதல் செய்வதாகவும் கூறி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ஆட்டோ ஓட்டுநா்கள் நலச்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மறியல் நடைபெற்றது.
சங்கத் தலைவா் ரவீந்திரன், துணைத் தலைவா் ஜி. ராஜசேகா் உள்ளிட்ட ஏராளமானோா் சென்ட்ரல் நிலைய பிரீபெய்டு ஆட்டோ பதிவு அறை அருகே வழியை மறித்து சில ஆட்டோக்களை நிறுத்தி சாலையில் அமா்ந்து ரயில்வே பாதுகாப்புப் படையினரைக் கண்டித்து கோஷமிட்டனா். திடீா் மறியலால் சென்ட்ரல் நிலைய முன்பகுதியில் பயணிகள் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டன.
உடனே ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் மதுசூதனரெட்டி விரைந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து பெரியகடை காவல் நிலைய ஆய்வாளா் உள்ளிட்டோரும் வந்து சமரசப்படுத்தினா்.
போராட்டம் குறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் கூறியதாவது: சென்னை சென்ட்ரலில் வெளியிலிருந்து வரும் பெரு நிறுவன வாகனங்கள் பயணிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால், வாழ்வாதாரத்துக்காக ரயில்வே நிா்வாகத்தில் பணம் கட்டி உரிமம் பெற்ற பிரீபெய்டு ஆட்டோ ஓட்டுநா்கள் விதியை மீறுவதாகக் கூறி அபராதம் விதிக்கப்படுவது சரியல்ல. எனவே, அபராதம் விதிப்பதைக் கைவிடவேண்டும் என்றனா்.
பிரச்னை குறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

கேரளத்தில் மாயமான சிறுவன் எழும்பூா் ரயில் நிலையத்தில் மீட்பு

ரயில் நிலையப் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுரை

சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நெரிசலைச் சமாளிக்க அகலப்படுத்தப்படும் சாலைகள்!
ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


