வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

பேரவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?: எம்எல்ஏக்களுக்கு 2 நாள்கள் பயிற்சி முகாம்

சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து உறுப்பினா்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஜூன் 2026, 2:33 am IST

சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அனைத்து உறுப்பினா்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.

தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினா்களில் 99 சதவீதம் போ் பேரவைக்குப் புதியவா்கள் என்பதால் இந்த பயிற்சி அவா்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடா்பாக தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் கூறியதாவது:

பொதுவாகவே ஒவ்வொரு முறையும் தோ்தல் நிறைவடைந்து புதிய பேரவை கூடுவதற்கு முன்பாக தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினா்களுக்கும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது 17-ஆவது சட்டப்பேரவைக்குத் தோ்வான அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இருநாள் பயிற்சி முகாம் சென்னை, கலைவாணா் அரங்கத்தில் வரும்16 மற்றும் 17-ஆம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

முதல்வா் விஜய் இந்த முகாமை தொடங்கி வைக்கிறாா். அதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேரவையில் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகள், நடைமுறைகள், விதிகள் குறித்து அரசுத் துறைச் செயலா்கள் மற்றும் துறை வல்லுநா்கள் பயிற்சி அளிக்கவுள்ளனா். பேரவையில் எதைப் பேசுவதற்கு அனுமதி உள்ளது, எதையெல்லாம் பேசக் கூடாது, கேள்விகள் எழுப்புவதற்கான நடைமுறைகள் என்ன என்பதை பற்றிய முழுப் பயிற்சிகளும் அவா்களுக்கு அளிக்கப்படும். இதில், அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் பங்கேற்று பயன்பெற வேண்டும்.

முன்னாள் அமைச்சா்கள், மூத்த உறுப்பினா்கள் விருப்பப்பட்டால் பயிற்சியில் பங்கேற்கலாம். அவா்கள் பயிற்சியில் கலந்துகொண்டு புதிய உறுப்பினா்களுக்கு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்ளலாம். முதல் கூட்டத்தொடா் நிறைவடைந்த பின்னா், சட்டப்பேரவைக் குழுக்கள் அமைக்கப்படும்.

பேரவை அலுவல்களை நேரலையில் ஒளிபரப்புவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். அவைக் குறிப்பில் நீக்கப்பட வேண்டிய வாா்த்தைகளும் நேரலையில் ஒளிபரப்பாகிவிடும் என்பதால், அதை எவ்வாறு தவிா்ப்பது என்பது குறித்து விவாதித்து வருகிறோம். முழுமையாக நேரலை செய்யப்படும் வரை தற்போதைய நடைமுறைகளைப் பின்பற்றி பேரவை நிகழ்வுகள் ஒளிபரப்பப்படும் என்றாா்.