பள்ளி மைதானத்தில் குளம் போல் காட்சியளிக்கும் மழைநீருடன் சேர்ந்த கழிவுநீர்.
பள்ளி மைதானத்தில் குளம் போல் காட்சியளிக்கும் மழைநீருடன் சேர்ந்த கழிவுநீர்.

நகராட்சிப் பள்ளி வளாகத்தில் தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தி: கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

நகராட்சிப் பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகியும் அந்த நீரை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. 
Published on

நகராட்சிப் பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகியும் அந்த நீரை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. 
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே பி.எஸ்.சீனுவாசன் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதோடு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும் இந்த வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. நகராட்சிப் பள்ளி வளாகத்துக்குள் மாவட்டக் கல்வி முதன்மை அலுவலகமும் செயல்பட்டு வருவதால் அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் வந்து செல்லும் முக்கிய வளாகமாக இப்பள்ளி விளங்குகிறது. 
கொசுப் புழுக்கள் உற்பத்தி: பள்ளி வளாகத்தின் தெற்குப்புற மதில் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. இதனால், மதில் சுவரையொட்டிள்ள கழிவுநீர்க் கால்வாயால் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. அதோடு, மழைக் காலங்களில் இந்தக் கால்வாய் மூலம் மழைநீர் பள்ளி வளாகத்துக்குள் வருவதாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், கடந்த 3 நாள்களில் ஒரு சில மணி நேரம் மட்டுமே கனமழை பெய்தது. இந்த மழைக்கே கழிவுநீருடன் சேர்ந்த மழைநீரானது பள்ளி மைதானத்தில் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதன்மூலம், அதிக கொசுப் புழுக்கள் உற்பத்தியாகியுள்ளன. 
சமூக விரோதிகளின் கூடாரம்: பள்ளி திறந்து ஓரிரு நாள்கள்தான் ஆகின்றன. ஆனால், பள்ளி வளாகம் முறையான பராமரிப்பின்றி, இடிந்து விழுந்த மதில் சுவர் வழியாக பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோதிகள் வந்து செல்லும் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், பெரும்பாலான இடங்களில் மதுபாட்டில்கள் உடைந்தும், சிதறியும் கிடக்கின்றன. இதனால், இங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுகாதாரச் சீர்கேடு: அதேபோல், பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்தும், பயன்பாடில்லாத வகுப்பறைக் கட்டடத்துக்குள் கழிவுகள், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. இது பாம்பு, விஷப்பூச்சிகள் வாழும் கூடாரமாக மாறிவிட்டது. மாவட்ட நிர்வாகம் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால், நகராட்சிப் பள்ளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அமைந்துள்ள இந்த இடத்திலேயே சுகாதாரச் சீர்கேடு காணப்படுவது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாவது: மழைக் காலங்களில் நகராட்சிப் பள்ளி வளாகத்தில் இவ்வாறு மழைநீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, நகராட்சி நிர்வாகத்துக்கு பல முறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியரிடமும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நகராட்சி ஊழியர்கள் யாரும் வரவில்லை. இதுதொடர்பாக மீண்டும் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து, சரிசெய்து விடுகிறோம் என்றார் அவர். 
இதுகுறித்து நகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கூறியதாவது: 
நகராட்சி மேல்நிலைப் பள்ளி சற்று தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக மழைக் காலங்களில் அவ்வப்போது மழைநீர் பள்ளி மைதானத்துக்குக்குள் வந்துவிடுகிறது. பள்ளிக்கு முன்புறம் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கினால், தெருவாசிகள் நேரடியாக பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் செல்ல வழிசெய்து விடுகின்றனர். 
இதனால், கழிவுநீரும் பள்ளி மைதானத்துக்குள் தேங்கி விடுகிறது. தேங்கும் மழைநீரை வெளியேற்ற தற்காலிகமாக மோட்டார் இயந்திரம் வைக்கப்பட்டு மழை நீரை குழாய் மூலம் வெளியேற்றுவோம். ஆனால், பள்ளி திறந்தவுடன் ஓரிரு நாள்களாக கனமழை பெய்து வருவதால் மைதானத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. அதேபோல், விடுமுறை நாள்களில், பள்ளி முடிந்த பிறகு, இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்துக்குள் வந்து மது அருந்துதல் உள்ளிட்ட தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். 
இதுதொடர்பாக, அண்மையில் அவர்களிடம் கண்டித்துக் கேட்டதற்கு, பள்ளி ஊழியர் ஒருவரைத் தாக்கி விட்டுச் சென்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம்தான் பழுதடைந்த மதில் சுவரைச் சீரமைத்து, பயன்பாடில்லாத கட்டடங்களை அப்புறப்படுத்தி பாதுகாப்புக்கு வழிவகுக்க வேண்டும். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமலே உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே தூய்மை உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை செய்திருக்க வேண்டும். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக நகராட்சிப் பள்ளிகளை முறையாகப் பராமரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com