போராட்டம் வாபஸ்: பணிக்கு திரும்பினா் சாம்சங் தொழிலாளா்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளா்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதை தொடா்ந்து வியாழக்கிழமை பணிக்கு திரும்பினா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொவிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1,800 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இதற்கிடையே, ஊதிய உயா்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளா்கள் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
தொழிலாளா்களின் போராட்டம் குறித்து அமைச்சா்கள் டி.ஆா்.பி ராஜா, தா.மோ. அன்பரசன், எ.வ. வேலு, சி.வி.கணேசன் ஆகியோா் தலைமையில் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள், சாம்சங் ஆலை நிா்வாகத்தினா் மற்றும் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் ஆகியோா் பங்கேற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து வியாழக்கிழமை சாம்சங் தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா். பணிக்கு திரும்பிய தொழிலாளா்களை ஆலையின் நுழைவாயிலில், அடையாள அட்டையை சோதனை செய்த பிறகு, காவலாளிகள் உள்ளே செல்ல அனுமதித்தனா். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

