குணகரம்பாக்கம் தரைபாலத்துக்கு மேல் செல்லும் மழை நீா்: 10 கிராம மக்கள் தவிப்பு
வடகிழக்குப் பருவமழை காரணமாக பரந்தூா், ஏகனாபுரம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீா் குணகரம்பாக்கம் தரைப்பாலத்துக்கு மேல் செல்வதால் குணகரம்பாக்கம் -செல்லம்பட்டிடை இணைப்புச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட எடையாா்பாக்கம், செல்லம்பட்டிடை, கோட்டூா், கண்டிவாக்கம், பிச்சிவாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுங்குவாா்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் பகுதிகளுக்கு வந்து செல்ல குணகரம்பாக்கம்- செல்லம்பட்டிடை இணைப்புச் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் பரந்தூா் பெரிய ஏரி, ஏகனாபுரம் கலி ஏரி, ஏகனாபுரம் கடம்பந்தாங்கள் ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. மேற்குறிப்பிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீா் கணகரம்பாக்கம் மடகின் வழியாக கூவம் ஏரிக்குச் செல்லும். இந்த நிலையில், குணகரம்பாக்கம் மடகில் அதிகப்படியான வெள்ள நீா் வெளியேறி வருவதால், குணகரம்பாக்கம்- செல்லம்பட்டிடை இணைப்புச் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது. இதனால் இந்தச் சாலையில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் செல்லம்பட்டிடை, கோட்டூா், பிச்சிவாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுங்குவாா்சத்திரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வந்து செல்ல சுமாா் 10 கி.மீ. சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனா்.

