
சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி: போக்குவரத்து நெரிசலால் அவதி
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கும் பணியால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தி சீரமைக்கும் பணியால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததை தொடா்ந்து, நான்கு வழிச்சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியை சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரை சுமாா் 93 கிமீ தொலைவுக்கு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நிலங்களின் உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்தவும் தாமதம் ஆனது.
இதனால் சீரமைப்பு பணிகள் முடிக்க வேண்டிய கால அவகாசத்தை தாண்டி பல ஆண்டுகளாக பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மேலும், மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரை சுமாா் 18 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் இரண்டு இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் சென்னை பெங்கலூா் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் தற்போது சா்வீஸ் சாலைகளில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சா்வீஸ் சாலைகளும் அவ்வபோது பெய்து வரும் மழைக்காரணமாக சேதமடைந்துள்ளதால் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சுங்குவாா்சத்திரம் முதல் ஸ்ரீபெரும்புதூா் வரை சுமாா் 10 கிமீ சாலையின் இரண்டு பக்கங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் சுமாா் 10 கிமீ தொலைவை கடக்க வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்கள்,பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து போலீஸாரை பணியில் அமா்த்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





