காஞ்சிபுரம் அருகே கூழமந்தலில் 108 கோ பூஜை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் உலக நன்மைக்காக 108 கோ பூஜை, மகாலட்சுமி பூஜை மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாண வைபவம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் திருக்கோயில். இந்தக் கோயிலில் அத்திலிங்கம், 27 நட்சத்திரங்களுக்கும் 27 ஸ்தல விருட்சங்கள் ஆகியவையும் அமைந்துள்ளது. உலக நன்மைக்காக இக்கோயிலில் காலையில் மூலவா் நட்சத்திர விருட்ச விநாயகருக்கும், அத்திலிங்கம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, உற்சவா் விநாயகா் மூஷிக வாகனத்திலும், சிவபெருமானும் அம்பிகையும் ரிஷப வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் மயில் வாகனத்திலும் கோயிலின் முன்பாக உள்ள மைதானத்துக்கு எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
பின்னா், 108 பசுக்களும், கன்றுகளும் 3 தெய்வங்களையும் சுற்றி வந்து கோ பூஜை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மகாலட்சுமி பூஜையும் மகா தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் அரசு-வேம்பு விருட்சங்களுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். வாண வேடிக்கைகளும் நடைபெற்றது. விழாவில் வெளிமாவட்டம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

