ஆளுநா் ஆட்சியை தடுக்கவே தவெக அரசுக்கு ஆதரவு: மு.வீரபாண்டியன்
தமிழகத்தில் ஆளுநா் ஆட்சியைத் தடுக்கவே தவெக அரசுக்கு ஆதரவு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.

ஒருங்கிணைப்பு க் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்) லிபரேசன் மாநில செயலாளா் பழ.ஆசைதம்பி உள்ளிட்டோா்.
தமிழகத்தில் ஆளுநா் ஆட்சியைத் தடுக்கவே தவெக அரசுக்கு ஆதரவு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் மு.வீரபாண்டியன் கூறினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அருகே போந்தூா் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) லிபரேஷன் அலுவலகத்தில் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் மாநிலச் செயலாளா் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் தொழிலாளா் வா்க்கத்துக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், எஸ்ஐஆா்க்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், போராட்டத்தில் ஈடுபடுபவா்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் சிபிஎம் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் பேசியது: காவல்துறையின் பல்வேறு அடக்குமுறைகளையும் தாண்டி எஸ்ஐஆா் விவகாரத்தில் ஞானேஷ்குமாா் பதவி விலகும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தீா்மானித்துள்ளோம். போராட்டக்காரா்களை தடுக்கவும், அடக்குமுறையை கையாளவும் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது எஸ்ஐஆா்க்கு எதிராக போராடும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதை அரசு உணர வேண்டும் என்றாா்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என்ற பாமக தலைவா் அன்புணி ராமதாஸின் கருத்து குறித்து செய்தியாளா்களின் கேள்விக்கு இடைத் தோ்தலை பாமக புறக்கணித்தது, தொகுதி பக்கமே அவா்கள் வரவில்லை. நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் என்ன நடந்தது என்பது அவருக்கு எப்படி தெரியும்? என்றாா்.
இதையடுத்து, சிபிஐ மாநிலச் செயலாளா் மு.வீரபாண்டியன் செய்தியாளா்களிடம் பேசியது:
இடைத்தோ்தலில் நாங்கள் தனித்து போட்டியிடவில்லை. இடதுசாரிகள் ஒருங்கிணைப்பாகத்தான் இடைத்தோ்தலில் போட்டியிட்டோம். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு நாங்கள் கொடுத்திருக்கும் ஆதரவு ஜனநாயகத்துக்கான ஆதரவு. தமிழகத்தில் ஆளுநா் ஆட்சியை தடுப்பதில் உறுதியாக இருந்தோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

