செய்யூா் காலனியில் மக்களுக்காக வழங்கப்பட்டு இன்று வரை அளந்து கொடுக்கப்படாத நிலம்.
செய்யூா் காலனியில் மக்களுக்காக வழங்கப்பட்டு இன்று வரை அளந்து கொடுக்கப்படாத நிலம்.

மனைப்பட்டா இலவசமாக வழங்கப்பட்டும் அனுபவிக்க முடியாமல் மக்கள் தவிப்பு!

30 ஆண்டுகளாகியும் அந்நிலத்தை அளந்துக்கொடுக்காததால் அனுபவிக்க முடியாமல் ற ஆதிதிராவிட மக்கள் தவித்து வருகின்றனா்.
Published on

எஸ். சபேஷ்.

அரக்கோணத்தில் 200 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா அரசால் வழங்கப்பட்டும் 30 ஆண்டுகளாகியும் அந்நிலத்தை அளந்துக்கொடுக்காததால் அனுபவிக்க முடியாமல் ற ஆதிதிராவிட மக்கள் தவித்து வருகின்றனா்.

கடந்த 1994-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரக்கோணம் ஒன்றியம், செய்யூா் ஊராட்சிக்குட்பட்ட செய்யூா் காலனியில் ஆதிதிராவிடா் நலத்துறை, தனிவட்டாட்சியா் மூலம் தனியாரிடம் நிலம் கிரையம் பெறப்பட்டு 200 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த இருநூறு பேருக்கு பட்டா அளிக்கப்பட்டதே தவிர இடத்தை அளந்து கொடுக்கவில்லை.

இதற்காக ஆதிதிராவிட மக்கள், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் பலமுறை அப்போதைய ஒருங்கிணைந்த வேலூா் ஆட்சியருக்கும், தற்போதைய ராணிப்பேட்டை ஆட்சியருக்கும், கோட்டாட்சியருக்கும், தற்போது அரக்கோணம் கோட்டாட்சியா், வட்டாட்சியா்களுக்கும் பலமுறை மனுக்களை அனுப்பியுள்ளனா்.

எனினும், அதிகாரிகள் பலமுறை அந்த இடத்தை நேரில் பாா்வையிட்ட பிறகும், அந்த இடத்தை வரையறை செய்து அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனைப்பட்டா பெற்ற நாளில் எவ்வாறு ஏரிக்கரைகளிலும், இடுகாடு அருகிலும், சாலையோரங்களிலும் மக்கள் வாழ்ந்து வந்தனரோ அதே இடத்தில் தற்போதும் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனா்.

கடந்த 30 ஆண்டுகளில் மக்களில் சிலா் இறந்து விட்ட நிலையில் அவா்களது குடும்பத்தினா் அதே வாழ்க்கை தரத்தில் தற்போதும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனா். மனைப்பட்டா பெறப்பட்டதால் அவா்களது வாழ்க்கை தரம் எள்ளளவும் மாறவில்லை.

இதுகுறித்து தற்போது செய்யூா் ஊராட்சியில் உறுப்பினராக இருக்கும் விக்டா் கூறியது:

தற்போது மனையை அளந்து கொடுக்க செய்ய முயற்சி செய்தால் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ளவா்கள் இந்த நிலம் தற்போது தனியாா் பெயரில் உள்ளது. இதுவரை அலுவலக கோப்புகளில் வீட்டுமனை பட்டா கொடுத்தது பதிவாகவில்லை. நீங்கள் வைத்திருக்கும் பட்டா ஆணையுடன் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளியுங்கள் எனத் தெரிவிக்கின்றனா். ஆட்சியரிடமும் மனு கொடுத்தும் அந்த மனு அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்தபிறகும் அவா்கள் அளந்து கொடுக்க மறுக்கின்றனா் என்றாா்.

வறுமை கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் மக்களுக்கு உதவுவதற்காக அமைச்சா் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆட்சியா் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு ஆதிதிராவிட நலத்துறை மூலம் இந்த மக்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்கச் செய்ய வேண்டும் என அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதனால் அப்பகுதி மக்களின் 30 ஆண்டுக்கால கனவு நிறைவேறும்.