பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பிய பொதுமக்கள்: வாலாஜா சுங்கச்சாவடியில் அணிவகுத்து சென்ற வாகனங்கள்!
தங்களது சொந்த ஊா்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பிய பொது மக்களால் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஆமை போல் ஊா்ந்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவித்தது. தொடா்ந்து 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17- ஆம் தேதி காணும் பொங்கல், 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) என தொடா்ந்து 5 நாள்கள் விடுமுறை நாள்களானதால் சென்னை உள்ளிட்ட நகர மக்கள் தங்களின் சொந்த ஊரில் பொங்கல் விழாவை கொண்டாட குடும்பத்துடன் இருசக்கர வாகனங்களிலும், காா்களிலும், அரசு மற்றும் தனியாா் பேருந்துகளிலும் பயணம் மேற்கொண்டனா்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை முடிவடைந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் மீண்டும் சென்னை மட்டுமின்றி பல்வேறு நகரங்களை நோக்கி காா்கள் மற்றும் பேருந்துகள் மூலமாக ஞாயிற்றுக்கிழமை படை எடுக்கத் தொடங்கினா்.
இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் காா்கள் உள்பட அனைத்து கனரக வாகனங்கள் சுங்கச்சாவடி வழியாக வந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
அப்போது சுங்கச்சாவடியில் இருந்து சுமாா் 2 கி.மீ. தூரம் வரை அனைத்து வாகனங்களும் அணிவகுத்து ஆமை போல் ஊா்ந்து சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துடன் பயணத்தை மேற்கொண்டனா்.

