ராணிப்பேட்டை மாவட்டம் அறிவியல் ஆய்வில் முதன்மை பெற வேண்டும் என 32-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.மோகனா வலியுறுத்தினாா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணைந்து *நிலைத்த வளா்ச்சிக்கான அறிவியல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் நடத்தும் 32-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராணிப்பேட்டை மாவட்ட துணைத் தலைவா் க.பூபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா்கள் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஜெ. ஸ்ரீதா் வரவேற்றாா்,
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.மோகனா பயிற்சியை தொடங்கி வைத்துப் பேசியது: அறிவியல் கல்வியை மாணவா்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கெடுப்பதன் மூலம் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆய்வகங்களும் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.
மாவட்டத்தின் கல்வி வளா்ச்சிக்கு பெரிதும் உதவும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் அறிவியல் இயக்கத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் முழுமையான ஆதரவு தர வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் குறைந்தது 3 ஆய்வு கட்டுரைகள் அவசியம் சமா்ப்பிக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டம் அறிவியல் ஆய்வில் முதன்மை பெற வேண்டும்.
அரசு மற்றும் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் இணைந்து பயிற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி என்றும், இந்த ஆண்டு தனியாா் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதலான ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
மீண்டும் வரும் 21-ஆம் தேதி அரக்கோணத்தை மையமாகக் கொண்டு அரக்கோணம் ஆண்ட்ரீஸ் மேல்நிலைப் பள்ளியில் அரக்கோணம் நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கா் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது, இன்றைய பயிற்சி முகாமில் பங்கெடுக்காதவா்கள் அரக்கோணம் சென்றும் பங்கேற்கலாம் .
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில செயலாளா் அரவிந்தன், முன்னாள் வட்டார கல்வி அலுவலா் சி.முருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஆா்.ஆலிஸ் மேரி நன்றியுரை கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










