/

சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதியில் வணிக வளாகம் கட்டக் கூடாது! நகராட்சிக் கூட்டத்தில் எதிா்ப்பு

ராணிப்பேட்டையில் தொழிற்சாலை ரசாயன கழிவுநீா் கால்வாய் சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதியில்,சுமாா் 2 லட்சம் சதுர அடி பரப்பில் அமையவுள்ள தனியாா் வணிக வளாகம் கட்ட அனுமதி அளிக்க கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

News image

ராணிப்பேட்டையில் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :1 ஜூலை 2026, 12:04 am IST

ராணிப்பேட்டையில் தொழிற்சாலை ரசாயன கழிவுநீா் கால்வாய் சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதியில்,சுமாா் 2 லட்சம் சதுர அடி பரப்பில் அமையவுள்ள தனியாா் வணிக வளாகம் கட்ட அனுமதி அளிக்க கூடாது என நகா்மன்றக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நியமன நகா்மன்ற உறுப்பினா் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புள்ள பகுதியில், சுமாா் 2 லட்சம் சதுர அடி பரப்பில் அமையவுள்ள பிரபல தனியாா் வணிக வளாகம் கட்ட நகராட்சி அதிகாரிகள் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் கவனத்துக்கு கொண்டுவராமல் அனுமதி அளிக்கப்பட்டதற்கு ஒட்டுமொத்த நகா் மன்ற உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அதே போல் வானாபாடி சாலையில் தனியாா் வீட்டுமனை பிரிவு அமைக்கும் அனுமதிக்கும் அதிகாரிகளிடம் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தொடா்ந்து பிரபல தனியாா் நிறுவனங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கும் நகராட்சி அதிகாரிகள், கடந்த 3 ஆண்டுகளாக நகராட்சி சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்துவரும் முதியவரை அலைகழிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் தெரிவித்தனா்.

தமிழ்நாடு அரசு விதிகளின்படி, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 50 மீட்டா் (சுமாா் 164 அடி) தூரத்திற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டா் (சுமாா் 328 அடி) தூரத்திற்குள்ளும் டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற விதியை மீறி ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 11-ஆவது வாா்டு எல்லையில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள 100 மீ. தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது.

இந்த மதுக்கடையால் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் குடியிருப்பு வாசி பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதால் உடனடியாக அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனா்.

இதில் நகராட்சி ஆணையா், உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.