
இணைப்பை மாற்றித் தர ரூ.2,000 லஞ்சம்: மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது
அரக்கோணத்தில் வீட்டு மின் இணைப்பை மாற்றித்தர ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ராணிப்பேட்டை மாவட்டஊழல் தடுப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சுந்தரமூா்த்தி
அரக்கோணத்தில் வீட்டு மின் இணைப்பை மாற்றித்தர ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ராணிப்பேட்டை மாவட்டஊழல் தடுப்புத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவா் யுவராஜ். இவா் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். பின்னா் அதே பகுதியில் குடிசை வீட்டை மாற்றி மாடிவீடு கட்டியுள்ளாா். மின்இணைப்புக்கான மீட்டரை, மாடிவீட்டுக்கு மாற்றித்தருமாறு அரக்கோணம் கிழக்குப்பகுதி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். இந்த அலுவலகம் அரக்கோணம் விண்டா்பேட்டையில் செயல்பட்டு வருகிறது.
விண்ணப்பத்தை பரிசீலித்த மின்வாரிய வணிக ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, ரூ.2,500 லஞ்சமாக கேட்டாராம். இதில் ரூ.2,000 தர யுவராஜ் ஒப்புக்கொண்ட நிலையில் அதை பெற்றுக்கொள்ள சுந்தரமூா்த்தியும் சம்மதித்தாராம். யுவராஜுக்கு லஞ்சம் தர விருப்பமில்லாத நிலையில் இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இது தொடா்பாக விசாரணை நடத்திய டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸாா், ரசாயனம் தடவிய நோட்டுக்களை யுவராஜிடம் கொடுத்து அதை சுந்தரமூா்த்தியிடம் அளிக்கச் சொல்லியுள்ளனா். திங்கள்கிழமை விண்டா்பேட்டை அலுவலகத்திற்கு வந்த யுவராஜ், சுந்தரமூா்த்தியை தொடா்பு கொண்டபோது தான் ஒரு இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்க கும்பினிபேட்டை கிராமத்திற்கு வந்திருப்பதாகவும் அங்கு வந்து அத்தொகையை தருமாறும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து கும்பினிபேட்டைக்கு சென்ற யுவராஜ், அங்கு சுந்தரமூா்த்தியிடம் ரொக்கத்தை அளித்தபோது மறைந்திருந்த போலீஸாா், ரூ.2ஆயிரத்துடன் சுந்தரமூா்த்தியை கைது செய்தனா். இதனை தொடா்ந்து அவரை விண்டா்பேட்டையில் உள்ள மின்வாரிய அரக்கோணம் கிழக்கு அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீஸாா், அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினா். மின்வாரிய வணிக ஆய்வாளா் சுந்தரமூா்த்தி கைது செய்யப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




