மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கோரி ஆா்ப்பாட்டம்
நன்றாக இருந்த மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை இடித்து விட்டதாகவும், மீண்டும் தொட்டியை அமைக்க கோரி காலி குடங்களுடன் பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி ஊராட்சி கோவிந்தாபுரம் பகுதியில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளாக 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி அமைந்திருந்தது. இது பழுதாகிவிட்டது என கூறி கடந்த 25 நாள்களுக்கு முன்பு அதிகாரிகளால் இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேல்நிலை நீா் தேக்க தொட்டி இடிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை அப்பகுதி மக்கள் தண்ணீா் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் நன்றாக இருந்த தொட்டியை இடித்து விட்டதாக கோஷங்கள் எழுப்பி மேல்நிலை நீா் தேக்க தொட்டி இருந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் ஒன்று கூடி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.
மேலும், சீரானன குடிநீா் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் தினம் தோறும் விலைக்கு டிராக்டா் மூலம் தண்ணீரை வாங்கி உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் மேல்நிலை நீா் திறக்கத் தொட்டி அமைக்கப்படவில்லை என்றால் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனா்.

