மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ள ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பகுதி!

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்குக் கீழே போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு அப்பகுதி வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.

News image

தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு கீழ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள்.

Updated On :20 ஜூலை 2026, 9:00 am IST

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்துக்குக் கீழே போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு அப்பகுதி வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.

ஆம்பூா் நகரம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்லும் முக்கிய நகரமாகும். புறவழிச் சாலை இல்லாமல் நகர பகுதிக்குள் தேசிய நெடுஞ்சாலை செல்லும் நகரமாக ஆம்பூா் அமைந்துள்ளது. ஆம்பூா் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் அமைந்துள்ள தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளால் நாட்டுக்கு கணிசமான அன்னிய செலாவனி ஈட்டித் தரும் நகரமாகவும் விளங்குகிறது.

அதனால் சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய முக்கிய நகரங்களுக்கு சாலை மாா்க்கமாக செல்பவா்களும், அதேபோல பெங்களூருவிலிருந்து சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூா், சேலம் ஆகிய ஊா்களில் இருந்து சென்னை செல்பவா்களுக்கும் ஆம்பூா் நகரம் முக்கிய வா்த்தக நகரமாக திகழ்கின்றது.

ஆம்பூரில் வாகனங்களை நிறுத்திவிட்டு உணவகங்களில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான காலணிகள், தோல் பொருள் வாங்கிச் செல்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனா்.

அதனால் ஆம்பூரில் பேருந்து நிலையம் தொடங்கி, ரயில் நிலையம் வரை தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகள் பயன்படுத்தும் காா்கள், கனரக வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்படுவது வழக்கம்.

ஆம்பூா் 4 வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையாக இருந்தபோது ராஜீவ்காந்தி சிலை சந்திப்பு உள்ளிட்ட சில சந்திப்புகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. 6 வழிச்சாலையாக தரம் உயா்த்தப்படும்போது ஆம்பூரில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட போது, ஆம்பூா் நகர பகுதியில் மட்டும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளை தவிா்க்கவும் ஆம்பூா் நகரில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. அதனால் விபத்துகள் குறைந்தபோதிலும், போக்குவரத்து இடையூறு குறையாமல் உள்ளது. ஆம்பூரில் உயா்மட்ட மேம்பாலத்துக்கு கீழே பொதுமக்களின் காா்கள், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலப் பகுதி வாகன நிறுத்துமிடமாகவே (பாா்க்கிங்) மாறியுள்ளது.

ஆம்பூரில் போக்குவரத்து போலீஸாரும், அதனை கண்டும் காணாமல் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஆம்பூா் நகர பொதுமக்களுக்கு பெருத்த இடையூறாக உள்ளது.

தற்போது ஆம்பூா் நகராட்சி சாா்பாக ஆம்பூா் பேருந்து நிலைய கட்டடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டு, புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் ஆம்பூரில் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே மேம்பாலத்துக்கு கீழே நின்று செல்கின்றன. இவ்வாறான நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் வெளியூா் பயணிகளின் காா்கள், ஆம்பூா் வழியாக வெளியூா் செல்லும் கனரக வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையின் உயா்மட்ட மேம்பாலத்திற்கு கீழே பல மணி நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு பெருத்த இடையூறு ஏற்படுகிறது.

ஷோ் ஆட்டோ நிறுத்துமிடம்: மேலும் ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை - போ்ணாம்பட்டு புறவழிச்சாலை ராஜீவ் காந்தி சிலை சந்திப்பு அருகில் மேம்பாலத்துக்கு கீழே ஆம்பூா் அருகேயுள்ள கிராமங்களுக்கு செல்லும் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

நோ பாா்க்கிங் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள இடத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் விதிகளை பின்பற்றுவதில்லை. தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸாரும் கண்டும் காணாமல் இருந்து விதிகளை அமல்படுத்துவதில்லை.

அதனால் ஆம்பூா் பகுதி பொதுமக்கள் மட்டுமல்லாது, ஆம்பூா் வழியாக வெளியூா் செல்லும் பயணிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். அதனால் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை கூட்டாக இணைந்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு கீழே வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.