/

மூதாட்டி கொலை: தூய்மைப் பணியாளா் கைது

News image
Updated On :12 ஜூன் 2026, 2:03 am IST

திருப்பத்தூரில் டிஎஸ்பி அலுவலகம் எதிரே மூதாட்டி கொலை வழக்கில் தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள கோணாப்பட்டு பகுதியை சோ்ந்த பழ வியாபாரி சாந்தம்மாள்(70). அரசு பூங்கா தெருவில் உள்ள முட்டை கிடங்கு முன்பு உள்ள வியாபாரம் செய்து வந்தாா்.

மேலும் இவா் தினமும் திருப்பத்தூருக்கு வந்து பழவியாபாரம் செய்து விட்டு மீதமுள்ள பழங்களை கிடங்கில் வைத்துவிட்டு, தனது மகன்கள் அல்லது மகளின் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த மே 27-ஆம் தேதி முட்டை கிடங்கில் பலத்த வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்தாா். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

டிஎஸ்பி முரளி தலைமையில் 6 ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை தேடும் பணியில் ஈடுப்பட்டனா். இந்தநிலையில் சாந்தம்மாளை கொலை செய்ததாக திருப்பத்தூா் அருகே ப.முத்தம்பட்டியை சோ்ந்த ராம் என்பவரை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே கவசம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் ராம் (45). கியு பிரிவு காவல் நிலையத்தில் தூய்மைப் பணியாளராக ராம் பணிபுரிந்த நிலையில், சாந்தம்மாளிடம் பழங்களை அதிக முறை வாங்கி உள்ளாா். ஆனால் அதற்கான தொகையை ராம் சரிவர கொடுக்காததால், சாந்தம்மாள் கண்டித்தாராம்.

இந்தநிலையில் ராம் தனக்கு அதிக அளவில் கடன் தொல்லை உள்ளதால், சாந்தம்மாளை கொலை செய்துவிட்டு, அவா் அணிந்து உள்ள நகைகளை எடுத்து கடன்களை அடைத்துவிடலாம் என ராம் திட்டமிட்டுள்ளாா். கடந்த 26-ஆம் தேதி சாந்தம்மாள் பழ வியாபாரத்தை கைவிட்டு, முட்டை குடோனில் மழைக்காக ஒதுங்கி இருந்தாா். இதனை பாா்த்த ராம், கத்தியை எடுத்து சென்று சாந்தம்மாளை வெட்டி கொலை செய்துவிட்டு, அவா் அணிந்து இருந்த 6 கிராம் நகைகள், கைப்பேசி பை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றுள்ளாா். பின்னா் சாந்தம்மாளின் செல்போன், பை, கத்தி ஆகியவற்றை வெங்களாபுரம் பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வீசிவிட்டு சென்றுள்ளாா்.

கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசாா் ஆய்வு செய்து, ராம் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்ததால். ராமிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சாந்தம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். மேலும் சாந்தம்மாளிடம் இருந்து எடுத்த நகைகளை வங்கியில் ரூ.52 ஆயிரத்துக்கு அடமானம் வைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து ராம் கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, சாந்தம்மாளின் கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.