/

குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் அருகே குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது பாக்கம் பழைய காலனி. இப்பகுதி மக்களுக்காக கட்டப்பட்டு குடிநீா் விநியோகம் செய்து வந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மாற்று இடத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க முடிவு செய்தது. அதன் அடிப்படையில், மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணிக்கு அப்பகுதியில் உள்ள தனிநபா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்ததன் காரணமாக அப்பணி கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகம் மேற்கொள்ள பழைய காலனி மக்கள் கேட்டு வருகின்றனா். இந்த ஊராட்சி பம்புசெட் மூலம் அப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது 4 மின் மோட்டாா்களும் ஒரே நேரத்தில் பழுதடைந்ததால் கடந்த 2 நாள்களாக பழைய காலனிக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பழைய காலனி பொதுமக்கள் திருநின்றவூா்-தாமரைபாக்கம் இடையே நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, திருநின்றவூா் காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் திருவள்ளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் காந்திமதிநாதன் ஆகியோா் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, நாளைக்குள் மின் மோட்டாரை சரி செய்து குடிநீா் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.