திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மதிப்பெண் சான்றிதழில் திருத்தி, மாற்றம் செய்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் மீது கடம்பத்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட கல்வி அலுவலர் புகார் செய்தார்.
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், மடத்துக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜி.ரவிச்சந்திரன்(58). இவர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்திற்கு புகார் வந்தது.
அதன் பேரில் அந்த ஆசிரியரின் பட்டய கல்வி சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது, ஆசிரியர் பட்டய மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை மாற்றம் செய்து பணியில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.
இதையும் படிக்க: நாமக்கல்லில் நிலத்தரகர் கொலை: காவல் துறையினர் விசாரணை
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அரசை ஏமாற்றி தனது சுயதேவைக்காக தவறான செயலில் ஈடுபட்ட இடை நிலை ஆசிரியர் ஜி.ரவிச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் போலி சான்றிதழ் கொடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியரால் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.