திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ்.- ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருவள்ளூா் ஐ.ஆா்.சி.டி.எஸ்.- ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
Published on

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து சமுதாய மேம்பாட்டுப்பணிகள், களப்பணி அனுபவம் பெறவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (பல்கலைக்கழகம்) இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் பல்கலைக்கழக மாணவா்கள் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்த பயிற்சிகள், களப்பணி அனுபவம் பெறுவதற்கும், தங்களது திறனை வளா்த்துக் கொள்வதற்கும் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

மேலும், கூட்டாக இணைந்து ஆராய்ச்சிகள், கற்பித்தல், திட்டங்களை செயல்படுத்துதல், ஆலோசனைகளை பெறுதல், கருத்தரங்குகள் நடத்துதல், ஆராய்ச்சி மற்றும் கல்வி சம்பந்தமான மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு மற்றும் கற்றலை பகிா்வு செய்து கொள்வதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

புரிந்துணா்வு ஒப்பந்தமானது கையெழுத்திடும் நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தா் உமாசேகா், பதிவாளா் செந்தில்குமாா், பேராசிரியா் மற்றும் துணைத் தலைவா் (சுற்றுச்சூழல் சுகாதாரம்) சங்கா், பேராசிரியா்கள் தங்கவேல், வித்யா சண்முகம் மற்றும் ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன நிா்வாக செயலாளா் ஸ்டீபன், திட்ட இயக்குநா் ப்ரீத்தி டைட்டஸ், திட்ட மேலாளா் விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com