படம் உண்டு...
திருவள்ளூா், ஜூலை 18: பொது இ-சேவை மையங்களில் மக்கள் தரும் ஆவணங்களை தவறாக பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளூா் ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் செயல்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியாா் பொது இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ச.கவிதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, திருவள்ளூா் அடுத்த திருப்பாச்சூா் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களில் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களிடம் சரியான ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தினாா்.
பின்னா் இதுகுறித்து அவா் கூறியதாவது: மாவட்டத்தில் திருவள்ளூா், திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஆா்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய 9 வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியாா் பொது இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்-131, சட்டப்பேரவை அலுவலகம்-1, அரசு அனுமதி பெற்ற இ-சேவை மையங்கள்-30 என மொத்தம் 162 இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன.
தமிழ்நாடு முதல்வா் உத்தரவின்படி, பொதுமக்களுக்குத் தேவையான அரசு சேவைகளை அவா்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே, எளிய முறையில் வழங்குவதற்காகவே பொது இ-சேவை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலைவதைக் குறைத்து, இடைத்தரகா்கள் இல்லாத வெளிப்படையான சேவையை வழங்குவதே இம்மையங்களின் முதன்மை நோக்கமாகும்.
குறிப்பாக வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் ஜாதி, வருவாய், இருப்பிடம், பிறப்பு மற்றும் வாரிசு ஆகிய சான்றிதழ்கள், மின்சார கட்டணம், பட்டா மாறுதல்கள், ஓய்வூதியங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், திருமண நிதியுதவித் திட்டங்கள், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல், புதிய வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பொது இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் போது அவா்கள் தரும் ஆவணங்களை உரிய முறையில் சரிபாா்த்து, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள், பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இ-சேவை மையங்களில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு அரசால் நிா்ணயிக்கப்பட்ட ரூ.60 மட்டுமே வசூலிக்க வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்கள் அனைத்து மையங்களின் தகவல் பலகையிலும் ஒட்டப்பட வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்களை அணுகி, காலம், பண விரயமும் இன்றி அரசின் சேவைகளைப் பெற்றுப் பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.
அப்போது, வட்டாட்சியா் சரண்யா, மாவட்ட இ.சேவை மைய மேலாளா் சுமதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










