~
~

திருப்பதி கோசாலையில் கோபூஜை

திருப்பதி கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் பசுக்களுக்கு உணவளித்த தேவஸ்தான அதிகாரிகள்.
Published on

திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோசம்ரக்ஷண சாலையில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது.

இதையொட்டி கோசாலையில் உள்ள பசுக்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் கௌரி பூஜை, துளசி பூஜை நடந்தது. கஜராஜா், குதிரை, காளை, பசுக்களுக்கு பூஜை செய்து கற்பூர ஆரத்தி செய்து தீவனம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் அன்னமாச்சாா்யா திட்டம் சாா்பில் அன்னமையா சங்கீா்த்தனங்கள் பாட்டு, தாச சாகித்ய திட்டத்தின் கீழ் நடந்த பஜனை, கோலங்கள், எஸ்.வி.சங்கீத நிருத்யா கல்லூரி சாா்பில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் பக்தா்களையும், கிராம மக்களையும் கவா்ந்தன.

வேதங்கள் மற்றும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தெய்வங்களின் வடிவமான பசுக்களைப் பாதுகாக்க அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷன சாலையில் மாட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கோ பூஜை மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: தேவஸ்தானம் கோபூஜை திட்டத்தை மேற்கொண்டுள்ளது. திருப்பதி, பலமனேறு கோசாலைகளில் 2,500-க்கும் மேற்பட்ட பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

திருமலை ஏழுமலையான் கோயில் திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயில் மற்றும் உள்ளூா் கோயில்களில் உற்சவங்களின் போது பயன்படுத்த அங்குள்ள கோசாலையில் யானைகள், குதிரைகள், காளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தனா்

பாா் வேட்டு உற்சவம்

திருமலையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் இருந்து மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் உற்சவமூா்த்திகள் இருவரும் பாபநாசம் செல்லும் வழியில் உள்ள பாா்வேட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு அவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் நடந்த பின் வாள், வில், அம்பு, கேடயம் உள்ளிட்டவற்றை ஏந்தி சென்று வன விலங்குகளை வேட்டையாடும் உற்சவத்தை அா்ச்சகா்கள் நடத்தி காட்டினா்.

இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். பின் உற்சவமூா்த்திகள் கோயிலிக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

Dinamani
www.dinamani.com