கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெற்ற புத்துணர்வு முகாமில் பங்கேற்று புதன்கிழமை திருவண்ணாமலைக்கு திரும்பிய கோயில் யானைகள் ருக்கு, லட்சுமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆண்டுதோறும் கோயில், மடம், ஆஸ்ரமங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு 48 நாள்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான புத்துணர்வு முகாம் கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தொடர்ந்து 48 நாள்கள் நடைபெற்ற இந்த புத்துணர்வு முகாமில் 100-க்கும் மேற்பட்ட கோயில், மடங்கள், ஆஸ்ரமங்களுக்குச் சொந்தமான யானைகள் பங்கேற்றன.
புத்துணர்வு முகாம் நிறைவு: இந்த புத்துணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. இதையடுத்து, அனைத்து யானைகளும் அந்தந்த கோயில், மடம், ஆஸ்ரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு: 29 வயதுடைய திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்கு, புத்துணர்வு முகாம் முடிந்து புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்கு வந்தது.
லாரியில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்ட ருக்குவுக்கு கோயில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர், மேளதாளங்கள் முழங்க கோயிலுக்குள் ருக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
யோக ராமர் கோயில் யானை லட்சுமி: இதேபோல, போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுடன் இணைந்த ஸ்ரீயோக ராமர் கோயிலுக்குச் சொந்தமான 22 வயதுடைய யானை லட்சுமியும் புத்துணர்வு முகாமுக்கு சென்றிருந்தது.
முகாம் நிறைவு பெற்ற நிலையில், இந்த யானையும் புதன்கிழமை காலை கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
இதையடுத்து, கோயில் ஊழியர்கள் லட்சுமிக்கு சிறப்புப் பூஜைகள் செய்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கோயில் யானைகள் ருக்கு, லட்சுமி ஆகியவை தற்போது மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும், ருக்குவின் காலில் இருந்த காயம் முழுமையாக குணமடைந்து இருப்பதாகவும் கோயில் நிர்வாகங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.