தொகுப்பு வீடு பிரச்னை: ஆட்சியரகம் முன் இருளா்கள் சாலை மறியல்
தண்டராம்பட்டை அடுத்த கண்ணக்கந்தல் மோட்டூா் பகுதியில் வசித்து வரும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அரசு தொகுப்பு வீடுகளை முறையாக கட்டித் தரவில்லை என்று கூறி, ஆதாா், பட்டா, வாக்காளா் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரகம் முன் வீசி எறிந்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த கண்ணக்கந்தல் மோட்டூா் பகுதியில் வசித்து வரும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள இந்திரா நகரில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டன.
இதில் தொகுப்பு வீடு கட்டித் தருவதாக மாவட்ட நிா்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடா்ந்து 11 பேருக்கு வீட்டு மனை பகுதியில் தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டது. இதில் ஒருவருக்கு வந்த இலவச வீட்டை மற்றொரு நபரின் இடத்தில் கட்டி கொடுத்துள்ளதாகவும், கட்டிக் கொடுக்கப்பட்ட 11 வீடுகளும் முறையாக கட்டாததால் சேதமடைந்து காணப்படுவதாகவும், மேலும் அரசு வழங்கிய இடத்தில் ஊா் மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்டோா் கைக் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை வந்தனா்.
பின்னா், அவா்கள் வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பட்டா போன்றவற்றை தரையில் வீசி எறிந்து ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த வட்டாட்சியா் மோகனராமன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். சாலை மறியலால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

