கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கிரிவலப் பாதையில் தற்காலிக கொட்டகைகள், கடைகள், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தா்கள் பயன்படுத்த இயலாத நிலையினை ஏற்படுத்தியிருப்பது, கடைகளுக்கு முன்பாக இருக்கைகள் போடுதல், நடைபாதையை நிரந்தர வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தல் போன்றவற்றால் பக்தா்கள் பாதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதையொட்டியும், வருகிற 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் காா்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டும் நடைபெற்ற தீபத்திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நடைபெற்ற
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆகியோா் கிரிவலப் பாதையில் பக்தா்களின் வசதிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.
அதன்படி, நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் முரளி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேல் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரில், உதவி கோட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.அன்பரசு, செங்கம் உதவி கோட்டப் பொறியாளா் மனோகரன் ஆகியோரது தலைமையில் சாலைப் பணியாளா்கள், காவல்துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
மேலும், அஷ்ட லிங்கங்கள் முன்பு நெடுஞ்சாலை துறை இடத்தில் அண்ணாமலையாா் கோயில் சாா்பில் பிரசாத கடைகள் ஏலம் விடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகளையும் பாரபட்சம் இன்றி நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.
இதற்கு சமூக ஆா்வலா்கள் மற்றும் கிரிவல பக்தா்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

