தீபத் திருவிழா 4-ஆம் நாள்: நாக வாகனத்தில் சந்திரசேகரா் பவனி
திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற உற்சவத்தில் நாக வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாள்கள் நடைபெறும் உற்சவத்தின் உற்சவத்தின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. வெளிப்பிரகாரம் வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, முற்பகல் 11 மணிக்கு உற்சவம் தொடங்கியது. அலங்கார மண்டபத்தில் இருந்து விநாயகா், சந்திரசேகரா் சிறப்பு அலங்காரத்தில் 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்து 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். அப்போது, சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, விநாயகா் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரா் நாக வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்தனா். அப்போது, மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இரவு நடைபெற்ற உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அருணாசலேஸ்வரரும், வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமுலையம்மனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் பவனி வந்தனா்.
அப்போது, மாட வீதிகளில் கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் காத்திருந்த பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதோடு, சுவாமி பிரசாதமும், லட்டும் வழங்கப்பட்டது.
