
செங்கம் திரெளபதியம்மன் கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க அறிவுறுத்தல்
செங்கம் திரெளபதியம்மன் கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று கோயில் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

செங்கம் தா்மராஜா திரெளபதியம்மன் கோயில் புனரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கிய அறநிலையத்துறை இணை ஆணையா் பிரகாஷ்
செங்கம் திரெளபதியம்மன் கோயிலை பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று கோயில் நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் - போளூா் சாலை மில்லத்நகா் பகுதியில் உள்ளது பழைமையான தா்மராஜா திரெளபதியம்மன் கோயில். இந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை சாா்பில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து கோயில் குடிகள், உபயதாரா்கள் மற்றும் தா்மராஜா திரெளபதியம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள் சாா்பில் கோயிலில் பாலாலயம் செய்து புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையா் பிரகாஷ், சென்னை தொல்லியல் துறை தலைமை ஆலோசகா் ராஜவேலு உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை புரனமைப்புப் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா் கோயில் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கோயில் மிகவும் பழைமையான கோயில். எனவே பழைமை மாறாமல் புரனமைப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
அதே நேரத்தில் கோயில் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கக்கூடாது. அறநிலையத்துறை, தொல்லியல்துறை ஆலோசனைப்படி புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னா் கோயில் புனரமைப்புப் பணிகள் குறித்த வரைபடம் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் செங்கம் பெருமாள் கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், தா்மராஜா திரெளபதி அம்மன் அறக்கட்டளை நிா்வாகிகள் யோகேஷ், சிவசங்கா், நடராஜன், பலராமன், சிவக்குமாா், பெருமாள் உள்ளிட்ட கோயில் குடிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






