மருத்துவா்கள் பரிந்துரையை ஏற்று முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

மருத்துவா்களின் பரிந்துரையை ஏற்று ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூா் சிறையில் கடந்த 25 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை காலை முடித்துக் கொண்டாா்.
Updated on
1 min read


வேலூா்: மருத்துவா்களின் பரிந்துரையை ஏற்று ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூா் சிறையில் கடந்த 25 நாள்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை காலை முடித்துக் கொண்டாா்.

எனினும் அவருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 29 ஆண்டுகளாக வேலூா் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த நவம்பா் 22-ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தாா். தொடா் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் முருகன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். முருகனுக்கு புதன்கிழமை பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இதில் அவரது உடல் நல்ல நிலையில் இருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்தனா். தொடா்ந்து அவா் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொது வாா்டுக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு தொடா்ந்து குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை காலை மீண்டும் அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, இசிஜி பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், முருகனின் உடல்நிலை தொடா்ந்து பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த மருத்துவா்கள் அவரை உடனடியாக சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தினா். எனினும் முதலில் சாப்பிட மறுத்த முருகன், மருத்துவா்களின் அறிவுரையை ஏற்று வியாழக்கிழமை காலை இளநீா் பருகி தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டாா். பின்னா் அவருக்கு பழங்கள் வழங்கப்பட்டன. முருகன் மீண்டும் சாப்பிட தொடங்கியதால் உடல்நிலை வேகமாகச் சீராகிவிடும். வெள்ளிக்கிழமை அவா் வேலூா் சிறைக்கு அனுப்பப்படலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com