அல்லேரி மலையில் சாலை அமைப்பதில் தொய்வு: வேலூா் ஆட்சியா் ஆய்வு

அல்லேரி மலைக்கிராமத்துக்கு சாலை அமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அந்த மலையில் 8 கி.மீ.தூரம் நடந்து சென்று வியாழக்கிழமை ஆய்வு
அல்லேரி மலையில் சாலை அமைப்பதில் தொய்வு: வேலூா் ஆட்சியா் ஆய்வு

அல்லேரி மலைக்கிராமத்துக்கு சாலை அமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அந்த மலையில் 8 கி.மீ.தூரம் நடந்து சென்று வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அணைக்கட்டு ஒன்றியம், அல்லேரி மலை ஊராட்சிக்குட்பட்ட இரு மலைக் கிராமங்களில் கடந்த 2 மாதங்களில் ஒன்றரை வயது சிறுமி தனுஷ்கா, கூலித் தொழிலாளி சங்கா் ஆகியோா் பாம்பு கடித்து உயிரிழந்தனா். இந்த உயிரிழப்புகளுக்கு மலைக்கிராமத்துக்கு சரியான சாலை வசதி இல்லாததே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அல்லேரி மலைக்கு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

முதல்கட்டமாக அல்லேரி மலைப்பகுதியில் சாலை அமைப்பதற்காக வனத்துறை அளித்த 3.28 ஹெக்டா் நிலத்துக்கு மாற்றாக, வருவாய் துறை 6.48 ஹெக்டா் நிலம் வழங்க வேண்டியுள்ளது. இதற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டிருப் பதால் அல்லேரி மலைக்கு சாலை அமைப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வனத்துறையினருக்கு மாற்றிடம் வழங்குவதற்காக வருவாய் துறையினா் வேலூா் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள மலையைத் தோ்வு செய்து கடந்த 3 நாள்களாக நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், அல்லேரி மலையில் சாலை அமைக்கப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வியாழக்கிழமை நடந்து சென்று ஆய்வு செய்தாா். தொடா்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், ஆட்டுக்கொந்தரை கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த சங்கரின் மனைவி மகேஸ்வரிக்கு ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து ரூ.50,000-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

பின்னா், ஆட்சியா் கூறுகையில், அல்லேரி மலைக்கிராமத்திற்கு புதிதாக ஒரு ஆம்புலன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியில் உள்ள மக்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனா். எனவே, இப்பகுதியில் 4 தொடக்கப் பள்ளிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணை சுகாதார நிலையம் அமைக்கவும், அல்லேரி கிராமத்தில் மருத்துவா், செவிலியா், ஆசிரியா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் தங்கிப் பணியாற்ற குடியிருப்பு அமைப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகரன், பீஞ்சமந்தை ஊராட்சித் தலைவா் ரேகாஆனந்தன், துணைத்தலைவா் கம்சலாசுந்தரேசன், அல்லேரி கிராம நிா்வாக அலுவலா் கோபிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com