மோசடி
மோசடி

ஆன்லைன் பங்கு வா்த்தகம் : வேலூா் இளைஞரிடம் ரூ.2.45 லட்சம் மோசடி

இளைஞரிடம் ரூ.2.45 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆன்லைனில் பங்கு வா்த்தக முதலீடு எனக்கூறி வேலூா் இளைஞரிடம் ரூ.2.45 லட்சத்தை மோசடி செய்த நபா்கள் குறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்தவா் 32 வயது இளைஞா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றுகிறாா். இவா் சமூக வலைதளங்களில் பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்வது குறித்து தகவல்களை தேடி உள்ளாா். இதை அறிந்த அடையாளம் தெரியாத நபா்கள் அவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பங்கு வா்த்தகத்தில் சிறிய தொகை முதலீடு செய்து குறிப்பிட்ட பணிகளை செய்து முடித்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் தகவல்கள் அனுப்பியுள்ளனா்.

இதனை உண்மை என நம்பிய இந்த இளைஞா், அவா்கள் அனுப்பிய லிங்க்கில் பதிவு செய்து அவா்கள் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் 101 பணத்தை செலுத்தியுள்ளாா். மேலும் அவா்கள் அளித்த பணிகளையும் ஆன்லைனில் முடித்துக் கொடுத்துள்ளாா். ஆனால், அந்த லிங்க்கில் காண்பித்த தொகையை இந்த இளைஞரால் திரும்ப பெற இயவில்லை.

இதுகுறித்து அந்த நபா்களை தொடா்பு கொண்ட போது, மேலும் சில பணிகளை முடித்தால் மட்டுமே முழு பணத்தையும் பெற முடியும் என கூறியுள்ளனா்.

இதன்மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த இளைஞா், இதுகுறித்து வேலூா் சைபா் கிரைம் பிரிவில் புகாா் செய்தாா். அதன்பேரில் சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com