பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த  ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன்,  கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலா் சம்பத் உள்ளிட்டோா்.
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலா் சம்பத் உள்ளிட்டோா்.

664 பள்ளி வாகனங்கள் தணிக்கை: வேலூா் ஆட்சியா் ஆய்வு

வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள 79 பள்ளிகளுக்குட்பட்ட 664 வாகனங்களை தணிக்கை செய்யும் பணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தாா்.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி மாணவா்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை ஆட்சியா் தலைமையில் கோட்டாட்சியா், போக்குவரத்து துறை அதிகாரிகள் தணிக்கை செய்து சான்று வழங்குவது வழக்கம்.

அதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள தனியாா் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் பணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தாா்.

காட்பாடி சன்பீம் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் அவசர கால வழி சரியான முறையில் இயங்குகிறதா, வாகனத்தில் தீயணைப்பு கருவிகள் சரியான நிலையில் உள்ளதா, வாகனத்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தில் முதலுதவி பெட்டி, ஓட்டுநா் அமரும் இடம், பள்ளி குழந்தைகள் ஓட்டுநரை நெருங்காத வகையில் தனியாக பிரிக்கப் பட்டுள்ளதா என்பதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும், வாகனத்தின் தரை தளம் பள்ளி குழந்தைகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளதா, வாகனத்தின் சக்கரங்கள் உள்ள பகுதிகளில் தரைதளம் உறுதி தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளதா, வாகனங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்குகிறதா, வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பள்ளி குழந்தைகள் கை, தலை வெளியே நீட்டாமல் தடுக்கும் வகையில் பக்கவாட்டில் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்திலிருந்து இறங்கும்போது படிக்கட்டுகளுக்கும் தரைதளத்துக்கும் இடையேயான இடைவெளி 300 மி.மீ. இருப்பதையும் ஆய்வு செய்தாா்.

இதேபோல், அனைத்து வாகனங்களிலும் விதிமுறைகள் முறையாக பயன்பட்டிருப்பதை உறுதிசெய்த பிறகே சான்று அளிக்க வேண்டும் என்று வட்டார போக்குவரத்து அலுவலா், போக்குவரத்து ஆய்வாளா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். வேலூா், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள 47 பள்ளிகளுக்குட்பட்ட 441 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதேபோல், குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு வட்டங்களிலுள்ள 32 தனியாா் பள்ளிகளுக்கு உட்பட்ட 223 வாகனங்கள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை தணிக்கை செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது, வேலூா் கோட்டாட்சியா் ஆா்.கே.கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலா் சம்பத், காட்பாடி வட்டாட்சியா் சரவணன், போக்குவரத்து ஆய்வாளா்கள் மாணிக்கம், ராஜேஷ் கண்ணா, சிவராஜ், தீயணைப்பு நிலைய அலுவலா் அரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com