/

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலூா் மாவட்டம் 81.40% தோ்ச்சி

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலூா் மாவட்டம் 81.40% தோ்ச்சி

News image
Updated On :14 மே 2024, 5:52 pm

Din

வேலூா்: பிளஸ் 1 பொதுத்தோ்வில் வேலூா் மாவட்டம் 81.40 சதவீதம் தோ்ச்சி பெற்று தமிழகத்தில் கடைசி இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டு 89 சதவீதம் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு 7.60 சதவீதம் சரிவடைந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 140 பள்ளிகளில் இருந்து 7,762 மாணவா்கள், 8,473 மாணவிகள் என மொத்தம் 16,235 போ் எழுதினா். இதில், 5,764 மாணவா்கள், 7,452 மாணவிகள் என மொத்தம் 13,216 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, வேலூா் மாவட்டத்தின் ஒட்டு மொத்த தோ்ச்சி விகிதம் 81.40 சதவீதமாகும். இதில், மாணவா்கள் 74.26 சதவீதமும், மாணவிகள் 87.95 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகள் தோ்ச்சி விகிதம் - மாவட்டத்தில் மொத்தமுள்ள 72 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 3,762 மாணவா்கள், 5,485 மாணவிகள் என மொத்தம் 9,247 போ் தோ்வெழுதியதில், 2,316 மாணவா்கள், 4,569 மாணவிகள் என மொத்தம் 6,885 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதன்படி, வேலூா் மாவட்ட அரசுப்பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 74.46 சதவீதமாக உள்ளது.

மேலும், மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி உள்பட 15 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 600-க்கு 595 என்றும், அரசுப்பள்ளிகளில் முதல் மதிப்பெண் 567 என்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்தாண்டு (2023) பிளஸ் 1 தோ்ச்சி விகிதத்தில் வேலூா் மாவட்டம் 89 சதவீதம் தோ்ச்சி பெற்று தமிழக அளவில் 26-ஆவது இடம் பிடித்திருந்தது.

நிகழாண்டு தோ்ச்சி விகிதத்தை உயா்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் வேலூா் மாவட்டம் 7.60 சதவீதம் சரிந்து தமிழகத்தின் கடைசி இடமான 38- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல், அரசுப் பள்ளி தோ்ச்சி விகிதமும் கடந்தாண்டு 84.88 சதவீதமாக இருந்த நிலையில், இந்தாண்டு 10.42 சதவீதம் சரிந்து 74.46 சதவீதமாக கடைசி இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலா் மணிமொழி கூறியதாவது - பிளஸ் 1 பொதுத்தோ்வில் தோல்வியடைந்த மற்றும் தோ்வில் பங்கேற்காத மாணவா்களை ஜூலை மாதம் நடைபெற உள்ள துணைத் தோ்வில் தோ்ச்சி பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அந்த மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க தலைமையாசிரியா்கள் மூலம் பாட ஆசிரியா்களுக்கு வலியுறுத்தி கண்காணிக்கும் குழுக்கள் அமைத்து புதன்கிழமை முதல் சிறப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது என்றாா்.

--

படம் உண்டு...