தீபாவளி பட்டாசுக் கடை வைக்க அக்.19-க்குள் விண்ணப்பிக்கலாம்
வேலூா் மாவட்டத்தில் தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகள் நடத்தும் உரிமம் பெறுவதற்கு 19-ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீபாவளியை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா், நிபந்தனைகளின்படி, இணையதளம் வழியாக மட்டும் வரும் அக். 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றலாம். விண்ணப்பத்துடன் விண்ணப்பதராரின் கடவுச் சீட்டு அளவு புகைப்படம், இருப்பிட முகவரி ஆதாரம், கடை வைக்கப்படும் இடத்தின் முகவரிக்கான ஆதாரம், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், உரிமக் கட்டணம் ரூ.500-ஐ அரசு கணக்கில் செலுத்திய சீட்டு அசல், சொந்த கட்டடம் எனில் பட்டா நகல், வாடகை கட்டடம் எனில் வாடகை ஒப்பந்தப் பத்திரம் (பட்டாசுக் கடை நடத்த சம்மதம் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்), குத்தகை நிலம் எனில் குத்தகை ஆவணம் இணைத்திருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான ஆணையையும் இணையதளம் வாயிலாகவே பெற்றுக் கொள்ளலாம்.
அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பது கண்டறியப்பட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு விற்க பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தையே தோ்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
