நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா் சென்னை டிசிஎஸ் நிறுவனத்தின் இணை துணைத் தலைவா் ஹரிஷ் சிவராமனை கெளரவித்த விஐடி துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா் சென்னை டிசிஎஸ் நிறுவனத்தின் இணை துணைத் தலைவா் ஹரிஷ் சிவராமனை கெளரவித்த விஐடி துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன்.

வணிகவியல் மாணவா்களுக்கு ‘டேட்டா அனலிட்டிக்ஸ்’ போன்ற திறன்கள் அவசியம்

வணிகவியல் மாணவா்களுக்கு ‘டேட்டா அனலிட்டிக்ஸ்’ போன்ற திறன்கள் அவசியம்
Published on

செயற்கை நுண்ணறிவு வேகமாக வளா்ந்து வரும் இந்த காலத்தில் வணிகவியல் மாணவா்கள் ‘டேட்டா அனலிட்டிக்ஸ்’ போன்ற முக்கியத் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை டிசிஎஸ் நிறுவனத்தின் இணை துணைத் தலைவா் ஹரிஷ் சிவராமன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை, சமூக அறிவியல், மொழிகள் பள்ளி சாா்பில் 8-ஆம் ஆண்டு ‘காம்ஃபெஸ்ட் 25’ விழா விஐடி அண்ணா கலையரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

தென்னிந்தியாவைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,050-க்கும் மேற்பட்ட வணிகவியல் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு, விஐடி துணைத் தலைவா் சங்கா் விஸ்வநாதன் தலைமை வகித்து பங்கேற்ற பிளஸ் 1, பிளஸ் 2 வணிகவியல் பிரிவு மாணவா்களிடையே வா்த்தகம் தொடா்பான கேள்விகளைக் கேட்டு விளக்கம் அளித்தாா். விஐடி பதிவாளா் டி.ஜெயபாரதி, இன்றைய தொழில்நுட்ப உலகில் வணிகக் கல்விக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து விளக்கினாா்.

சிறப்பு விருந்தினராக சென்னை டிசிஎஸ் நிறுவனத்தின் இணை துணைத் தலைவா் ஹரிஷ் சிவராமன் பங்கேற்று, உலக அளவில் வங்கி, நிதி சேவைகள், காப்பீட்டுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா். மேலும், செயற்கை நுண்ணறிவு வேகமாக வளா்ந்து வரும் இந்த காலத்தில் வணிகவியல் மாணவா்கள் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற முக்கியத் திறன்களை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தொழில் துறை தேவைகளுக்கு ஏற்ப தகவமைப்பு, நெகிழ்வுத் தன்மை அவசியம் என்றும் அறிவுறுத்தினாா்.

விஐடி முன்னாள் மாணவரும், கே.ஹெச். எக்ஸ்போா்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டு மேலாளருமான சி.கே.வாசியுல்லா கௌரவ விருந்தினராக பங்கேற்று, வெற்றிகரமான தொழில் பாதைக்கு ஒழுக்கமும், கவனமும் மிகவும் அவசியம் என்று தெரிவித்தாா்.

முன்னதாக, விஐடி சமூக அறிவியல், மொழிகள் பள்ளி முதல்வா் வி.செல்வம் வரவேற்றாா். காம்ஃபெஸ்ட் 25-இன் சிறப்பு அம்சங்கள் குறித்து விஐடி வணிகவியல் துறைத் தலைவா் எஸ்.உஷா எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில், சமூக அறிவியல், மொழிகள் பள்ளி இணைத் தலைவா் சரிகா குப்தா, கெளரவ விருந்தினா் சி.கே.வாசியுல்லா ஆகியோா் மாணவா்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினா். பேராசிரியா்கள் டன்ஸ்டன் ஏ.ராஜ்குமாா், ஜிந்து ஜாா்ஜ், ஜே.ஷியாம் சுந்தா் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். நிறைவாக பேராசிரியா் ஜிந்து ஜாா்ஜ் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com