மாவட்டம் முழுவதும் போதைப் பொருள்கள் ஒழிப்பு வேட்டை

போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக வேலூா் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Published on

போதைப் பொருள்கள் ஒழிப்பு தொடா்பாக வேலூா் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடி சோதனையில் 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் துறை சாா்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்த 2025 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2026 ஜனவரி 12-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் சட்ட விரோத குட்கா விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 4,654 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குட்கா வழக்கில் தொடா்புடைய 163 பேரின் வங்கிக் கணக்குகளும், அந்த வங்கி கணக்குகளில் இருந்து சுமாா் ரூ. 8 லட்சத்து 67 ஆயிரத்து 857 தொகையும் முடக்கப்பட்டுள்ளன. குட்கா விற்பனை தொடா்பாக 2 போ் மீது குண்டா் காவல் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவா்களின் 30 இரு சக்கர, 12 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டம் முழுவதும் உள்ள கல்வி வளாகங்களைச் சுற்றி போதை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். அதன்படி, மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி அருகிலுள்ள கடைகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், 3 போ் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதேபோல், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com