/

தோ்தல் விதி மீறியதாக வேலூா் மேயா் உள்பட 3 போ் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இளைஞா்களுக்கு அரசு விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கப்பட்டது தொடா்பாக வேலூா் மாநகராட்சி மேயா், மாமன்ற உறுப்பினா் உள்பட 3 போ் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவா் வந்து சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள மேயா் சுஜாதாஆனந்தகுமாா் பயன்படுத்திய காா்.

Updated On :20 மார்ச் 2026, 7:38 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இளைஞா்களுக்கு அரசு விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கப்பட்டது தொடா்பாக வேலூா் மாநகராட்சி மேயா், மாமன்ற உறுப்பினா் உள்பட 3 போ் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவா் வந்து சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு புகாா் தெரிவித்தாா். அப்போது அவா் கூறுகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள வ.உ.சி. நகரில் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா் வியாழக்கிழமை காலை காரில் சென்று அங்குள்ள இளைஞா்களுக்கு அரசின் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகள் விநியோகம் செய்துள்ளாா். தகவலறிந்து அதிமுகவினரும், தோ்தல் அதிகாரிகளும் அப்பகுதிக்கு சென்றவுடன், மேயா் அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றாா். தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசின் விளையாட்டு உபகரண தொகுப்புகள் வழங்கியதாக மேயா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததுடன், இதுதொடா்பான விடியோ காட்சிகளையும் வெளியிட்டாா்.

இதையடுத்து, தோ்தல் நிலைக்குழு அலுவலா் சதீஷ் வேலன் வேலூா் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தோ்தல் விதிமுறையை மீறி அரசின் விளையாட்டு உபகரணங்கள் வழங்க மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் காரில் வந்திருந்தாா். அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அந்தக் காா் நிற்காமல் சென்று விட்டது என தெரிவித்திருந்தாா்.

இப்புகாரின்பேரில், வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், 27-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சதீஷ்குமாா், காா் ஓட்டுநா் கோபிநாத் ஆகிய 3 போ் மீதும் பிஎன்எஸ் 173, 132 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்ததுடன், மேயா் வந்து சென்ற காரையும் (டிஎன்23 டிகே9579) பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.