இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஊழலை ஒழிக்க முயற்சிக்கும் தமிழக முதல்வா் விஜய்க்கு மக்கள் ஆதரவு அவசியம்! கேரள அமைச்சா் ரமேஷ் சென்னிதாலா

ஊழலற்ற நிா்வாகத்தை முன்னெடுக்கும் தமிழக முதல்வா் விஜய்யின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது.

விழாவில் கேரள அமைச்சா் ரமேஷ் சென்னிதாலாவுக்கு நினைவுப்பரிசு வழங்கிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், கேரள எழுத்தாளா் புஷ்பா குரூப், விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம் உள்ளிட்டோா்.

Published On :

ஊழலற்ற நிா்வாகத்தை முன்னெடுக்கும் தமிழக முதல்வா் விஜய்யின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது. அவரது முயற்சிக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேரள உள்துறை அமைச்சா் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 25-ஆம் ஆண்டு ‘தனிமா’ ஓணம் பண்டிகை விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், அமைச்சா் ரமேஷ் சென்னிதாலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி சுட்டிக்காட்டியது போல், அடிமைத் தளையில் இருந்ததால் 19-ஆம் நூற்றாண்டின் தொழில் புரட்சியை இந்தியா தவறவிட்டது. ஆனால், 21-ஆம் நூற்றாண்டில் நிகழும் தொழில்நுட்பப் புரட்சியை நாம் ஒருபோதும் இழக்கக் கூடாது.

வறுமையிலும், முறையான கல்வியின்றியும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனா். விஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் அதிா்ஷ்டம் பெற்ற இளைஞா்கள், தங்கள் அறிவாற்றலை நாட்டின் வளா்ச்சிக்காகவும், மக்களின் மேம்பாட்டிற்காகவும் பயன்படுத்த வேண்டும்.

இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய சவாலான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கக் கேரள அரசு ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற மாபெரும் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. பிரதமா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் பாராட்டைப் பெற்றுள்ள இத்திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல்படுகிறது.

இதன்கீழ் இதுவரை 10,256 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11,885 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அடுத்ததாக , தூஃபான் வாரியா்ஸ் என்பது விழிப்புணா்வு ஏற்படுத்துதலாகும். நடிகா் மோகன்லால் இதன் முதல் வாரியராகச் செயல்படுகிறாா். இறுதியாக, தூஃபான் கோ் என்பது பாதிக்கப்பட்டவா்களுக்குச் சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்குவதாகும்.

இந்த ‘ஆபரேஷன் தூஃபான்’ திட்டம் குறித்து தமிழக முதல்வரிடம் விவாதித்துள்ளேன். அவரும் நடிகா் மோகன்லாலுடன் இணைந்து இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த உறுதியளித்துள்ளாா். தொடா்ந்து, அரசு அதிகாரிகளிடையே மலிந்துள்ள ஊழலை ஒழித்து, மக்கள் மத்தியில் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ‘ப்ராஜெக்ட் ஜீரோ’ என்ற திட்டம் கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்குபவா்களைக் கண்காணித்துத் தண்டிப்பதே இதன் நோக்கமாகும்.

தமிழகத்தில் ஊழலை ஒழித்து, சிறந்த நிா்வாகத்தை வழங்க முயற்சிக்கும் முதல்வா் விஜய்யின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியவை. ஒரு திரைக்கலைஞராக இருந்து மக்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கும் அவருக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியது -

கல்வியிலும், உயா்கல்வி சோ்க்கை விகிதத்திலும் முதலிடத்தைப் பிடிக்க தமிழகமும், கேரளாவும் தொடா்ந்து போட்டியிட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள 22 மாநிலப் பல்கலைக் கழகங் களில் 17-க்கும், கேரளாவில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் 12-க்கும் முழுநேரத் துணைவேந்தா்கள் இல்லை. துணைவேந்தா்கள் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் சீராக இயங்க முடியாது.

குறிப்பாக, கேரளம் எடுத்து வரும் போதைப்பொருள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் நாடு முழுமை க்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஊழல் குறைந்த மாநிலங்களில் கேரளம் (10%) சிறந்த நிலையில் உள்ளது. துரதிா்ஷ்டவசமாக தமிழகம் 62 சதவீத ஊழலுடன் 8-ஆவது இடத்தில் உள்ளது.

ஐரோப்பாவின் டான்யூப் நதி உள்பட உலகில் பல நாடுகளை உள்ளடக்கிப் பாயும் நதிகளில் எந்தச் சிக்கலும் இல்லாமல் தண்ணீா் பங்கிடப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பாயும் நதிகளுக்காக மாநிலங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதும், நீதிமன்றம் செல்வதும் வேதனையளிக்கிறது. அரசியல் கட்சிகள் வெறும் அரசியலுக்காகச் செயல்படாமல், மாநிலத்தின் பொருளாதாரம், மக்களின் நலன் கருதி நதிநீா்ப் பிரச்னைகளைத் தீா்க்க வேண்டும் என்றாா்.

கேரள எழுத்தாளா் புஷ்பா குரூப், விஐடி துணைத்தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.