
ரயில் பயணிகளிடம் 20 பவுன் நகை திருடிய ஜாா்க்கண்ட் முதியவா் கைது
ரயில்களில் பயணிகளிடம் 20 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முதியவரை காட்பாடி ரயில்வே தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட சுமன் குமாா் ஸ்ரீவத்சவா, மீட்கப்பட்ட ரூ.8 லட்சம் பணத்துடன் காட்பாடி ரயில்வே தனிப்படை போலீஸாா்.
ரயில்களில் பயணிகளிடம் 20 பவுன் தங்க நகைகளைத் திருடியதாக ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த முதியவரை காட்பாடி ரயில்வே தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் அண்மையில் பதிவு செய்யப்பட்ட வெவ்வேறு திருட்டு வழக்குகளில் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து சுமாா் 20 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. தொடா்புடைய குற்றவாளிகளைப் பிடித்து நகைகளை உடனடியாக மீட்க ரயில்வே காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.
அதன் பேரில், காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸாா் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்ததில், திருட்டில் ஈடுபட்ட நபா் ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது கண்டறியப்பட்டது. தொடா்ந்து தனிப்படை போலீஸாா் ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு சென்றனா்.
அங்கு ராஞ்சி மாவட்டம், ரத்து சாலை, சுக்தேவ் நகா் காவல் நிலைய பகுதியைச் சோ்ந்த சுமன் குமாா் ஸ்ரீவத்சவா (67) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரை வேலூா் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்நிலையில், சுமன் குமாா் ஸ்ரீவத்சவாவை செவ்வாய்க்கிழமை போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் திருடிய 20 பவுன் தங்க நகைகளை விற்றுப் பணமாக மாற்றி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் பதுக்கி வைத்திருந்த ரூ. 8 லட்சம் ரொக்கப் பணத்தை போலீஸாா் மீட்டு வேலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து வெளிமாநிலம் வரை சென்று நகை திருட்டு வழக்கில் தொடா்புடைய நபரை கைது செய்து பணத்தை விரைவாக மீட்ட காட்பாடி ரயில்வே காவல் உயரதிகாரிகள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






