சுங்க வசூல்: வருமானத்தை இழந்து பரிதவிக்கும் வாகன உரிமையாளர்கள்

 ஈரோடு, ஆக. 30: வாடகை வருமானத்தில் பெரும்பகுதி சுங்கத்துக்கு சென்றுவிடுவதால் வேன் மற்றும் மினி ஆட்டோ உரிமையாளர்கள், வாகனங்களை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  புதிதாக அமைக்கப்
Updated on
2 min read

 ஈரோடு, ஆக. 30: வாடகை வருமானத்தில் பெரும்பகுதி சுங்கத்துக்கு சென்றுவிடுவதால் வேன் மற்றும் மினி ஆட்டோ உரிமையாளர்கள், வாகனங்களை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலிருந்து, திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி இடையே சாலையை கடந்து செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் சுங்கம் வசூலிக்கப்பட்டுவருகிறது.

 கார், பயணிகள் வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு, ஒரு முறை மட்டும் நுழைவதற்கு ரூ.33-ம், ஒரே நாளில் (24மணிநேரத்திற்கு) பலமுறை சென்றுவர ரூ.50-ம், வசூல் செய்யும் இடத்திலிருந்து தினமும் 10 கி.மீ வரை சென்று வரும் வாகனகங்களுக்கு மாதம் ரூ.150-ம், 20 கி.மீ. வரை சென்று வரும் வாகனங்களுக்கு மாதம் ரூ.300-ம் வசூல் செய்யப்படுகிறது.

 இலகுரக வர்த்தக வாகனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள சரக்கு ஆட்டோ, வேன், டெம்போ ஆகிய வாகனங்களுக்கு ஒருமுறை நுழைவதற்கு ரூ.59-ம், ஒரே நாளில் பலமுறை சென்று வருவதற்கு ரூ.88-ம், மாதத்திற்கு ரூ.1758-ம் வசூலிக்கப்படுகிறது.

 சுங்கம் வசூல் செய்யப்படும் விஜயமங்கலத்தில், தற்போது ஏறத்தாழ 50 சரக்கு ஆட்டோக்கள் மற்றும் 15 வேன் மற்றும் டெம்போக்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும், 10 கிலோமீட்டரில் உள்ள பெருந்துறை மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை ஆகிய இடங்களுக்கு தினமும் பொருட்களை ஏற்றிச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

 விஜயமங்கலத்திலிருந்து பெருந்துறை வரை அதிகபட்சம் ரூ.200 வாடகைக்கு இயக்கப்படும் இந்த வாகனங்கள் சுங்க கட்டணமாக ரூ.88 செலுத்த வேண்டியுள்ளது. வாடகை முழுவதும் சுங்க வரிக்கும் டீசலுக்கும் சென்றுவிடுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள இலகு ரக வாகனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

 இதுகுறித்து விஜயபுரி வேன் மற்றும் மினி ஆட்டோ உரிமையாளர்கள் சங்க செயலர் உதயகுமார் தெரிவித்தது:

 சரக்கு ஆட்டோவிற்கு ஓராண்டுக்கான சாலை வரி ரூ.2450, வேனுக்கு ரூ.3600. ஆனால் இங்கு ஒரு மாதத்திற்கான சுங்க கட்டணம் மட்டும் ரூ.1788 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்டதூரம் செல்லும் வாகனங்களுக்கு வாடகை அதிகமாக இருக்கும், சுங்கம் செலுத்துவதில் சிரமமில்லை. ஆனால் 10 கிலோ மீட்டருக்குள் இயக்கப்படும் வாகனங்களுக்கு அதிகமாக சுங்கம் வசூலிப்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 10 கிலோ மீட்டருக்குள் இயக்கப்படும் கார், பயணிகள் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது போன்று மாதம் ரூ.150 என்ற சுங்க கட்டணத்தை தங்களுடைய வாகனங்களுக்கும் நிர்ணயம் செய்யவேண்டும். அல்லது வசூல் மையத்தின் பின்னால் இலகு ரக வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் தனியாக சாலை அமைத்துத்தரவேண்டும்.

 இதுகுறித்து சுங்கவரி வசூல் மைய ஒப்பந்ததாரரான குமாரபாளையம் டோல்வேஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர் நாராயணனிடம் கேட்டபோது:

 விஜயமங்கலம் மற்றும் பெருந்துறை இடையே 10 கிலோ மீட்டர் வரை இயக்கப்படும் மனி ஆட்டோக்களுக்கு மாத கட்டணமாக ரூ.150-ம், 20 கிலோ மீட்டர் வரை இயக்கப்படும் வாகனங்களுக்கு ரூ.300-ம் வசூலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 20 கிலோ மீட்டருக்குள் இயக்கப்படும் சரக்கு வேன் மற்றும் டெம்போ உள்ளிட்ட வாகனங்களுக்கு மாத கட்டண நிர்ணயம் குறித்து, தெசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் முடிவு மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

 விஜயமங்கலத்திலிருக்கும் ஸ்டேண்டிலிருந்து உரிமையாளர்கள் அருகில் 1 கிலோ மீட்டரில் உள்ள செங்காடுக்கு வாகனங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்லும்போதும், வீட்டிலிருந்து ஸ்டேண்டிற்கு கொண்டுவரும்போதும் சுங்கம் செலுத்த வேண்டும். இதனால் கடந்த இரண்டு நாட்களாக வாகன உரிமையாளர்கள் இரவு நேரத்தில், விஜயமங்கலத்தில் உள்ள நண்பர்களின் வீடுகளில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு நடந்து செல்கின்றனர். எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இரவில் அடுத்தவர் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்கள், திருட்டுப்போகவும் வாய்ப்புள்ளது என்பதால், காலையில் வாகனத்தை பார்த்த பின்னரே உரிமையாளர்கள் நிம்மதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com