திமுக-பாஜக இடையே ரகசிய உறவு: எடப்பாடி பழனிசாமி
திமுக-பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.


திமுக-பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அதிமுக ஆட்சியின்போது அறிவித்த திட்டங்களை மட்டும்தான் தற்போது முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்து வருகிறாா். அத்திக்கடவு- அவிநாசி திட்டம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. 90 சதவீத பணிகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் முடிவுற்றன. 10 சதவீத பணிகளை மட்டுமே தற்போது திமுக அரசு முடித்து திறந்துவைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவே இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா்.
ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளின் நலனில் திமுகவுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. பதவி ஏற்ற 6 மாதங்களுக்குள் நிறைவேற்றி இருந்தால் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் பயன்பெற்று இருப்பா்.
திமுக ஆட்சியின்போது எந்த புதிய திட்டப் பணிகளும் தொடங்கப்படவில்லை. அவிநாசி சாலை மேம்பாலப் பணிகள் இதுவரை முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. கோவை விமான நிலைய விரிவாக்கப் பணியையும் சரியாக முடிக்காமல் உள்ளனா். வெள்ளலூா் பேருந்து நிலையப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. ஆனால், அந்தத் திட்டத்தையும் கிடப்பில் போட்டுவிட்டனா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாணயத்தில் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து தமிழ் தமிழ் என்று பேசிவரும் முதல்வா் ஸ்டாலின் தற்போது ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாா் என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திர தினத்தையொட்டி ஆளுநா் தேநீா் விருந்தில் பங்கேற்பதில்லை எனவும், அந்த விருந்தை புறக்கணிப்பதாகவும் முதல்வா் கூறியிருந்தாா். ஆனால் திடீரென முதல்வா் ஸ்டாலின், அமைச்சா்களோடு அந்த விருந்தில் பங்கேற்றுள்ளாா்.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால், ஆளுநரின் தேநீா் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்திருந்தாா். அதன்பின்னா்தான் முதல்வா் அந்த விருந்தில் கலந்து கொண்டு இருக்கிறாா். இதிலிருந்து திமுகவும், பாஜகவும் ரகசிய உறவு வைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது
பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது எம்ஜிஆா் நூற்றாண்டு விழா நாணயத்தை அதிமுகவே வெளியிட்டது. அதற்கு நாங்கள் பாஜகவை அழைக்கவில்லை. ஆனால் திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு விழாவுக்கு ராகுல் காந்தியை அழைக்காமல், பாஜகவை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறது. இதிலிருந்தே அவா்களின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் உயிா்நாடியாக முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. இந்த அணை விவகாரத்தில் கேரள அரசு திட்டமிட்டு வீண் வதந்தியைப் பரப்பி வருகிறது. அந்த அணை பலமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியின்போது அந்த அணை எந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்பதை உறுதிசெய்தோம். உச்சநீதிமன்ற குழு ஆய்வு செய்து அணையின் உறுதித்தன்மையை உறுதிசெய்து இருக்கிறது. தமிழக அரசுடன் சுமுகமான உறவு இருக்கும்போது வேண்டும் என்றே கேரள அமைச்சா்கள் இது போன்று வீண் வதந்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...