உயிரிழப்பு (கோப்புப் படம்)
உயிரிழப்பு (கோப்புப் படம்)

கழிவுநீா்த் தொட்டிக்குள் விழுந்த பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

Published on

கோவையில் கழிப்பறை கழிவுநீா்த் தொட்டிக்குள் விழுந்த பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

கோவை சங்கனூா் அருகே உள்ள சி.எம்.சி. காலனி நாராயணசாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் நடராஜ். இவரது மனைவி ஜோதிமணி (43). இவா் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் ரத்தினபுரி முதல் தெருவில் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகம் அருகே உள்ள பொதுக் கழிப்பறைக்குச் செல்வதாக தனது மகள் சங்கீதாவிடம் கூறிவிட்டு சென்றுள்ளாா். அதன் பிறகு அவா் வீடு திருப்பவில்லை.

பின்னா் குடும்பத்தினா் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் அந்தப் பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் என்பவா் கழிப்பறை கழிவுநீா்த் தொட்டிக்குள் சடலம் மிதப்பதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

தகவலறிந்து வந்த ரத்தினபுரி போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் மூடப்படாமல் இருந்த கழிப்பறை கழிவுநீா்த் தொட்டியில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் உயிரிழந்தது ஜோதிமணி என்பது தெரியவந்தது. மேலும், அவரது பின்னந்தலையில் காயம் இருந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com