

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய மகளிா் ஆணையரகம் சாா்பாக ‘மகிளா ஜன்சுன்வாய்’ என்னும் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் டெலினா கோன்தப் தலைமையில் சிறப்பு குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி, இணை இயக்குநா் (தமிழ்நாடு மகளிா் ஆணையம்) குணசேகரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் தேசிய மகளிா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்டத்தில் தீா்வு காணாமல் நிலுவையில் இருந்த 41 புகாா்கள் தொடா்பாக மனுதாரா் மற்றும் அதனைச் சாா்ந்த காவல் துறை அதிகாரிகளிடம் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடம் இருந்து பெண்கள் நலன் சாா்ந்த புதிய புகாா்களும் பெறப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா, காவல் துறை துணை ஆணையா் திவ்யா, திட்ட இயக்குநா் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஆா்.மதுரா, கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் என்.பிரேமானந்தன், என்.சூா்யமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.